செய்திகள்

பாலியல் தொல்லையால் மாங்காட்டில் பள்ளி மாணவி தற்கொலை: கடிதத்தில் உருக்கம்

சென்னை, டிச. 19–

சென்னை மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்கொலைக்கு முன்பு மாணவி உணர்ச்சி பொங்க எழுதிய 3 கடிதங்கள் வெளியாகியுள்ளன.

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று காலை அவரது தந்தை வழக்கம் போல காலையில் வேலைக்குச் சென்றுள்ளார். பிற்பகல் நேரத்தில் தாயும் வெளியே சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவி அறைக்குள் சென்று தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாங்காடு போலீசார், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையைப் போலீசார் ஆய்வு செய்த போது, அங்கு மாணவி எழுதிய உருக்கமான 3 கடிதங்கள் போலீசாரிடம் சிக்கின. அதில் 2 கடிதங்களில், பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என்று அந்த மாணவி உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் துன்புறுத்தலை நிறுத்துங்கள் என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில், பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என்று அந்த மாணவி உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இதுக்கு மேல என்னால வாழ முடியாது. ரொம்ப வலிக்கிது. எனக்கு ஆறுதல் சொல்லக் கூட யாருமே இல்லை. நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை. அந்தக் கனவு வந்து போகுது. படிக்க முடியல. இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்ல.

என்னோட கனவு எல்லாம் போயிடுச்சு. எவ்வளவு வலி! இங்குள்ள அனைத்து பெற்றோரும் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தங்கள் மகன்களுக்கு கற்றுத் தர வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக் கூடாது. அம்மா போய்ட்டு வரேன். இன்னொரு உலகத்திற்கு! பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் மட்டுமே” என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளியிலும் பாதுகாப்பு இல்லை

மேலும், அவர் ‘School is Not Safety’ என்றும் மாணவி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு கடிதத்தை மாணவி எழுதி விட்டு, பின்னர் அதைக் கிழித்து போட்டு உள்ளார். அதில், முன்னாள் ஆசிரியை ஒருவரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது சாவுக்கு அவரே காரணம் எனவும் அவரது பெயரைக் குறிப்பிடாமல் எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி குறிப்பிட்ட ஆசிரியையின் மகன் யார்? என விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கூறும்போது, “எங்கள் மகள், இதற்கு முன்பு தனியார் பள்ளியில் படித்து வந்தாள். அந்த தனியார் பள்ளி ஆசிரியையின் மகன்தான் என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரை கைது செய்து தூக்கில் போடவேண்டும்” என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை மாங்காட்டில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 3 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *