செய்திகள் நாடும் நடப்பும்

பாலஸ்தீன விவகாரத்தில் ஐ.நா. சபையில் தனிமைப்படுத்தப்பட்ட அமெரிக்கா

* நவீன ஆயுதங்களை விற்றதால் அதைக் கண்காணிக்க தயக்கம் ஏன்?

* இனப் படுகொலை தொடர மறைமுகமாக உதவும் அமெரிக்கத் தலைவர்கள்


ஆர்.முத்துக்குமார்


இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஐந்து மாதங்களாக பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் பகுதிகளான காசா மற்றும் ரப்பா பகுதிகளில் ராணுவ முற்றைகையிட்டு அதிரடியாக யுத்தத் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதை உலக நாடுகள் இந்த இனப்படுகொலைகளை மிகுந்த கவலையுடன் கையைப் பிசைந்தபடி பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஐ.நா. சபையில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவர் ஆதரிக்கவில்லை என்றால் அதாவது வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தினால் எந்த முடிவையும் எடுக்கவே முடியாது.

அதைத் தான் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதை இதர நாடுகள் தட்டிக் கேட்க வழியின்றி தள்ளி நின்று வேடிக்கை பார்த்து வந்தது.

ரஷ்யாவும் சீனாவும் இஸ்ரேல் விவகாரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து காசாப் பகுதியில் நடைபெறும் ராணுவத் தாக்குதல்களை இனப்படுகொலை என்று வர்ணித்து எதிர்த்து வந்தாலும் எந்த ஒரு நிரந்தரத் தீர்வையும் எடுக்க முடியாது திணறுகிறார்கள்.

இந்தத் தொடர் தாக்குதலில் காசா பகுதியில் மட்டும் 31 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர்பலி கொடுத்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் தப்பித்துக்கொள்ள நாட்டை விட்டு வெளியேறியும் உள்ளனர்.

அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் பல ஆண்டுகளாக அவர்களின் நவீன போர் தளவாடங்களை வாங்கி குவித்து வருவதும் அறிந்ததே.

அமெரிக்க ஆயுதங்களை கொண்டு இப்பகுதியில் சர்வாதிகாரப் போக்கைக் கடைபிடித்து வந்த இஸ்ரேலுக்குப் பல ஆண்டுகளாகவே பாலஸ்தீன மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதை உலகம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

எண்ணை வள பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கம் இஸ்ரேலை கட்டுப்படுத்துவதில் இருப்பதால் மறைமுகமாக அமெரிக்காவும் இஸ்ரேலுக்குச் சாதகமாக செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

போர் நடவடிக்கைகள் ஒரு சாரருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதுடன், உணவு, மருந்து என எந்த அன்றாட தேவைகளுக்கும் வழியின்றி தவித்துக்கொண்டிருக்கும் அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு குரலாய் இருப்பது ஹமாஸ் அமைப்பினர், ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்கள், ஒருவகையில் தீவிரவாதிகள் என்று கூறலாம்.

ஹமாஸ் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உலக தலைவர்களின் பார்வையைத் திசை திருப்பி தங்களைப் பார்க்க வைக்கும் நிலைக்காக இஸ்ரேல் மீது சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் தாக்குதல் நடத்தியது.

இது தான் சமயம் என அமெரிக்க ராணுவமும் ஜனாதிபதி பைடனும் இஸ்ரேலுக்கு வந்து இறங்கி முழு ஆதரவு தர முடிவெடுத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்த உதவியது.

ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பினர் இப்படித் தன்னிச்சையாக ஒரு நாட்டிற்கு யுத்தத்தில் உதவலாமா?

பிற நிரந்தர உறுப்பினர்களின் நிலைப்பாட்டை கூட கேட்க நினைக்காமல் அப்படி ஒரு முடிவு எடுத்ததை சர்வாதிகார போக்கு என்று உலக நாடுகள் நேரடியாகவே எச்சரிக்க ஆரம்பித்தது.

ரஷ்யாவின் விடா முயற்சியாலும் ஐ.நா. அமைப்பின் மீது நம்பிக்கை வைத்து இருந்ததாலும் இஸ்லாமியர்களின் புனித நாட்களான ரம்ஜான் பண்டிகை நேரத்தில் இப்படி கொலைவெறி தாக்குதல் கூடாது எனக் கோரி வந்தனர்.

முடிவில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் காசா பகுதியில் போர் நிறுத்தம் என்பது பற்றி விவாதங்கள் ஐ.நா. சபையில் நடந்தது.

மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டு 14 நாடுகளும் உடனடி போர் நிறுத்தம் என்று அறிவுறுத்தியது.

எல்லா நாடுகளும் இப்படி அணி திரண்டு வந்து விட்ட நிலையில் அமெரிக்கா முதல்முறையாக இஸ்ரேலுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை. வாக்கு அளிக்காமல் இருந்து விட்டதால் அதாவது வீடோ அதிகாரத்தை பயன்படுத்தாமல் போர் தடை அமுலுக்கும் உடனடியாக வந்துவிட்டது.

அமெரிக்கா தரப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதாவது கொள்கை மாற்றம் கிடையாது என்பதை வாக்களிக்காமல் தள்ளி இருப்பது சுட்டிக்காட்டுகிறது என்கிறார்கள்.

அமெரிக்க சட்டப்படி தங்களது ஆயுதங்களை பெற்ற நாடுகள் எதிரிகளை தாக்குவது நேர்ந்தால் அதை விசாரிக்க அதிகாரம் உண்டு.

இப்படிப்பட்ட இனப் படுகொலை நடந்து கொண்டிருப்பதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என வழிதேடிக் கொண்டு இருக்கும் ஐ.நா. சபைக்கு தற்போது நடைமுறைக்கு வந்துள்ள போர்த் தடுப்பு சிறு வெற்றியாக தெரியலாம்; விரைவில் வர இருக்கும் நிரந்தர தீர்வுக்கான முதல் படியை கடந்துள்ளோம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக இஸ்ரேலும் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் எந்த ஆயுதங்களை கொண்டு ராணுவ தாக்குதல் நடத்தினர் என்ற கேள்வியும் எழும். அப்போது அமெரிக்காவின் மெத்தனப் போக்கும் இரட்டை முக அரசியல் தன்மையும் வெட்ட வெளிச்சமாகும்.

காசா பகுதியில் குண்டு சத்தங்களும் தாக்குதல்களும் நின்று விட்டாலும் இஸ்ரேல் மேலும் பிற பகுதிகளான ராபா பகுதியிலும் நுழையலாம்.

மொத்தத்தில் பாலஸ்தீன மக்களின் நிலைமை படுமோசமானது. இதைப் பற்றி ரஷ்யாவின் புதினும் சீனத் தலைவர்களும் விரைவில் சந்தித்துப் பேசி நிரந்தர தீர்வுக்கான வழியை யோசித்து அதை அமுல்படுத்தியாக வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *