ஜெருசலேம், ஆக.10–
கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில், 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7–ந் தேதி முதல் மோதல் நடக்கிறது. காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். ‘ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் தொடரும்’ என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், இன்று (10–ந் தேதி) கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 100 பேர் பலியானார்கள். 50–க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் ஏராளமான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை தெரிந்து, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது என ஹமாஸ் படையினர் குற்றம் சாட்டி உள்ளனர்.