செய்திகள்

பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை

500க்கும் மேற்பட்டோர் பலி

ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீடு தகர்ப்பு

ஜெருசலேம், அக். 8–

பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை இஸ்ரேல் விமானப்படை தாக்கி அழித்துள்ளது. இதில் இருதரப்பிலும் 500க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2,500 பேர் காயமடைந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தில் செயல்படும் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுவினர் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கு எதிராக போரை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ள அந்த அமைப்பினர், தங்களது நடவடிக்கைக்கு ‛ஆபரேஷன் அல் அக்சா பிளட்’ என்ற பெயர் சூட்டி உள்ளனர்.

முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்களை ஏவியதாகவும் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் அனைத்து ஆக்கிரமிப்புகளுக்கும் முடிவு கட்டுவோம் எனவும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த ராக்கெட் தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த பெண் உட்பட 250 பேர் உயிரிழந்து உள்ளனர் மேலும் இரு தரப்பிலும் சுமார் 2,500 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இஸ்ரேலைச் சேர்ந்த 35 ராணுவ வீரர்களை, ஹமாஸ் குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏராளமான கட்டிடங்கள், கார்கள், பஸ்கள் தீப்பிடித்து எரிந்தன. அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். ராக்கெட் வீச்சால், பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் ராக்கெட் விழும் சத்தம் கேட்டது. மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

டெல் அவிவ்வில்

அவசர நிலை

இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ், அஷ்க்கெலான் உள்ளிட்ட நகரங்களிலும் ராக்கெட் மூலம் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இந்நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

ஜெருசலேம் நகர் முழுவதும் சைரன் ஒலித்தபடி உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. அந்த நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, போருக்கு தயாராக உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயற்சி செய்ததாக குற்றம்சாட்டி உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், பாராகிளைடர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சாலைகளில் சென்ற கார்களும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.

ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்ஸ்

காசா முனையில் ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‛ஆபரேசன் அயர்ன் ஸ்வார்ட்ஸ்’ பெயரில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை துவக்கி உள்ளது. இஸ்ரேலின் 7 நகரங்களுக்குள் நுழைந்த ஹமாஸ் குழுவினருடன், அந்நாட்டு வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். காசாவில், ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதலால் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. காசாவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீதும் விமானப்படை விமானங்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் கடந்த 5 நாட்களாக இஸ்ரேலியர்கள் தங்கி உள்ளதாகவும், அவர்களுக்கு துணையாக ராணுவமும் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் வெளியேறாத காரணத்தினால் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை துவக்கி உள்ளதாக தெரிகிறது.

இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்பதால், அச்சம் அடைந்துள்ள பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர். இஸ்ரேல் அதிபர்

காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதால் அங்குள்ள பொதுமக்களை வெளியேறும்படி இஸ்ரேல் அதிபர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் வீட்டை இஸ்ரேல் விமானப்படை தாக்கி அழித்துள்ளது. இந்த வீடு ஹமாஸ் அமைப்பின் ஆயுத கட்டமைப்பாக செயல்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தெற்கு நகரமான ஒபாகிமில் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்தனர். அங்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி பிணைக்கைதிகளை மீட்டனர். அங்கு நடந்த சண்டையில் ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.இஸ்ரேலில் 1,80,00 இந்தியர்கள் இருக்கலாம் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 900 இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும், உள்நாட்டு அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும், மிகவும் அவசியமின்றி, வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *