லக்னோ, செப். 11
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர், தன்னை துரத்தியவர்களிடம் தப்பிக்க 100 அடி உயர பாலத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரை விட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஜான்பூர் மாவட்டத்தில் தன்னை துரத்திய கிராம மக்களின் அடி, உதையில் இருந்து தப்பிக்க, பாலத்தில் ஏறிய அவ்னிஷ் குமார் (வயது 31) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை திருடன் எனக் கூறி கிராம மக்கள் அவரை துரத்தியதால், பாலத்தில் ஏறி சுமார் 8 மணி நேரமாக அங்கும் இங்குமாக ஓடி போக்கு காட்டி வந்துள்ளார்.
அவரை மீட்பதற்காக போலீசார் பாலத்தில் ஏறியதும் அங்கிருந்து குதித்துள்ளார். உடனே அவரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.