போஸ்டர் செய்தி

பாலக்காட்டில் எம்ஜிஆரின் புதுப்பிக்கப்பட்ட இல்லம்: கவர்னர் சதாசிவம் திறந்து வைத்தார்

கேரளா, பிப். 26

கேரள மாநிலம் பாலக்காட்டில், எம்ஜிஆரின் புதுப்பிக்கப்பட்ட இல்லத்தினை, அம்மாநில கவர்னர் சதாசிவம் திறந்து வைத்தார்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடவனூரில் உள்ள தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வாழ்ந்த இல்லத்தினை மனிதநேய ஐஏஎஸ் அறக்கட்டளை நிர்வாகி சைதை துரைசாமி ரூ.1 கோடி மதிப்பில் புதுப்பித்து உள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட புதிய இல்லத்தினை கேரள மாநில கவர்னர் சதாசிவம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். புதிய வீட்டில், கவர்னரின் துணைவியார் குத்து விளக்கை ஏற்றி வைத்தார். பின்னர் அவர்கள், எம்ஜிஆர் நடித்த திரைப்படங்கள் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

சத்யபாமா விலாசம்

விழாவில், மனிதநேய ஐஏஎஸ் அறக்கட்டளை நிர்வாகி சைதை துரைசாமி வரவேற்று பேசுகையில்,

எம்ஜிஆர் வளர்ந்த இல்லம் எந்தவித பராமரிப்பும் இன்றி புதர் மண்டிக் கிடப்பதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை கண்ட பின்னர் அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதாகவும், பின்னர் எம்ஜிஆரின் குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்று அதை சீரமைத்ததாகவும் தெரிவித்தார்.

எம்ஜிஆரின் தாய் பெயரில் சத்யபாமா விலாசம் என இல்லத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு அருகாட்சியகமும், எம்ஜிஆரின் உருவப்படம் மற்றும் அவரது சிலை இடம் பெற்றுள்ளது.

எம்ஜிஆர் இல்லம் திறப்பு விழாவில், எம்ஜிஆரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் மற்றும் கேரள மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *