செய்திகள்

பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்திட்ட பாலே, எகிப்தின் மம்மி, திருவிழா நடனங்கள்

சென்னை, ஜன. 12–

பொங்கல் திருநாளையொட்டி, ரஷ்ய கலைக்குழுவினர் தமிழகத்தில் நடத்தும், ரஷ்ய பண்பாட்டு நடனத் திருவிழா 18 ஆம் ஆண்டாக நடைபெற்றது.

இந்திய ரஷ்ய வர்த்தக கழகம், ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மையம், ரஷ்ய பண்பாடு நட்புறவுக் கழகம் சார்பில், தமிழகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக, ரஷ்ய கலைக்குழுவினர் பங்கேற்கும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. 18 ஆம் ஆண்டாக, ரஷ்ய கலாச்சார மையத்தில் எலினா நிக்கலேனா தலைமையிலான 13 ரஷ்ய கலைஞர்களின் பண்பாட்டு நடன விழா, நேற்று மாலையில் நடைபெற்றது. இந்த விழாவை, தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத், ரஷ்ய தூதர் ஓலிக் என். அவ்தீவ், ஜெம் வீரமணி, பட்டர்பிளை லட்சுமி நாராயணன், ரஷ்ய மைய இயக்குநர் கென்னடி ஏ.ராகலேவ், இந்திய–ரஷ்ய தொழில் வர்த்தக கழகத்தின் செயலாளர் தங்கப்பன், சுந்தர வடிவேல் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து வாழ்த்தினர்.

18 வது ஆண்டு விழா

அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:–

இந்திய–ரஷ்ய நட்புறவை மேம்படுத்தவும், கலை பண்பாட்டை பறிமாறிக்கொள்ளும் வகையில், கடந்த 18 ஆண்டுகளாக, தமிழ்நாட்டின் ரஷ்ய கலைஞர்களின் நடன விழா நடைபெற்று வருகிறது. தமிழர்களின் திருநாளான பொங்கலையொட்டி நடப்பது, நமக்கு கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. இந்த விழா, அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து, சிறுமி ஆர்.கிருஷிகாவின் பாரதியார் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது.

“இந்த அவனியிலே

ஒரு அமரகவி

வாழ்ந்தான்…

அவன் பெயர் பாரதியார்…

நாட்டின் சுதந்திரத்தை–

ஞானியைப் போலவே,

ஏட்டினிலே தீட்டி…

இன்பம் அடைந்து சென்றான்…”

என்ற பாடலை, தனது எழிலான நடன திறமையால் அழகு மிளிர வெளிப்படுத்திய பாங்கு, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

ரஷ்ய பாலே

அதனைத்தொடர்ந்து, ரஷ்ய கலைஞர்களின் 90 நிமிட நடனக்கலை விருந்து, அடுத்தடுத்து 28 வெவ்வேறு ரஷ்ய நடனங்கள் நடைபெற்றது. முதல் நடனமாக, கலிங்கா நடனம் இடம்பெற்றது. ரஷ்ய மக்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, 1890 ஆம் ஆண்டு எழுதப்பட்ட பாடலுக்கான நடனம் தொடக்கத்திலேயே பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது. அடுத்து, தமிழகத்தின் புகழ்பெற்ற பரதநாட்டியம் போல, ரஷ்யர்களுக்கான மரபார்ந்த நடனமான, பாலே நடனம், அடிலைன் யாகோவலேவாவின் மிகச் சிறப்பான நடத்தால் அனைவரையும் கவர்ந்தது.

அடுத்து ரஷ்ய கிளாசிக்கல் குழு நடனம் வண்ணமயமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து, 3 பெண்கள் ஆடிய நடனத்தின் ஒயிலான பாங்கு, பார்வையாளர்களின் கரவொலியை அள்ளியது. தொடர்ந்து, 5 பெண்கள் பங்கேற்று அரங்கேற்றிய பழத்தோட்ட நடனமும், ரஷ்ய தொழிலாளர்கள் பணியாற்றி உற்சாகமாக இருக்கும் அழகிய நடனமும் எழிலாக இருந்தது, பார்வையாளர்களை கவர்ந்தது.

பொம்மை நடனம்

அதனைத்தொடர்ந்து, ரஷ்ய விளையாட்டை எடுத்துக்காட்டும் நடத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் கலைஞர் பங்கேற்புடன் அரங்கேறியது. அதில் அத்தனை வேகமும், விருவிருப்பும் சிறப்பாக வெளிப்பட்டது. அடுத்து, ரஷ்ய இயங்கும் பொம்மை நடனம் இடம்பெற்றது. அதில் இடம்பெற்ற 2 கலைஞர்களும் சாவி கொடுக்கப்பட்ட இயங்கும் பொம்மைகளுக்கு உயிர் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுபோல், மிக இயல்பாக ஆடியது, அத்தனை எழிலாக இருந்தது.

அடுத்து, வானத்து நட்சத்திரங்கள் நம்மை அலங்கரிக்கும் வண்ணமயமான நடனமும், அடுத்து அரங்கேறிய எகிப்தின் மம்மி நடனமும் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தது. மம்மி நடனத்தில், ஒரு திருடர்களை பழிவாங்கும் மம்மியின் அடுத்தடுத்த திருப்பங்களை ரஷ்ய கலைஞர்கள் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தனர்.

தொடர்ந்து காதல் நடனம், ரஷ்யாவின் திருவிழா நடனம், நாட்டுப்புற நடனம், நிலவின் மறுபுறத்தை எடுத்துக்காட்டும் நடனம் என்று, அடுத்தடுத்து ரஷ்ய கலைஞர்கள் அரங்கேற்றிய 28 நடனமும், இடைவெளி இல்லாமல் பார்வையாளர்களை விழிகள் விரிய வியக்க வைத்தது. கலைஞர்கள், அடுத்தடுத்த வெவ்வேறு வகை நடத்துக்கு ஏற்ப, ஆடை மாற்றிக்கொண்டு, மேடையை அலங்கரித்த விதம் அனைத்தும், அசத்தல் ரகம் என்று சொல்லலாம்.

நேற்று மாலை சென்னையில் துவங்கிய ரஷ்ய கலைஞர்களின் இந்த நடனத் திருவிழா, பொங்கல் திருநாளையொட்டி, அடுத்து மேட்டுப்பாளையம், ஊட்டி, ஈரோடு, கன்னியாகுமரி, சென்னை என பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *