போஸ்டர் செய்தி

பார்வையற்ற 42 பேருக்கு பணி நியமன ஆணை: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை, செப். 14–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (14–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், பூவிருந்தவல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த 42 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் அரசு அச்சகங்களில் இளநிலை புத்தகம் கட்டுனர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

எழுதுபொருள் அச்சுத் துறையானது மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுத் துறைகளின் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் நிலைப்படுத்தப்பட்ட படிவங்கள், பதிவேடுகள், துறை சார்ந்த நடைமுறை நூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், தேர்தல் படிவங்கள், தேசிய மக்கள் தொகை பதிவேடுகள் ஆகியவற்றை அச்சிட்டு வழங்கி வருவதுடன், அரசு அச்சகங்களுக்கு தேவையான புதிய நவீன எந்திரங்களை கொள்முதல் செய்தல், உதிரிபாகங்கள் மற்றும் காகிதங்களை கொள்முதல் செய்தல், அரசு அச்சகங்களுக்கு தேவையான பணியாளர்களை நியமனம் செய்தல் ஆகிய பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அத்துடன், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பணிபுரியும் மொத்த பணியாளர்களில் 12 விழுக்காடு பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புத்தகம் கட்டுதல்

அந்த வகையில், புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பின்றி, வருமானம் ஈட்ட வழியில்லாமல் உள்ளதாலும், அவர்களுக்கு தனியார் அச்சகங்களில் வேலை கிடைப்பது அரிது என்பதாலும், பூவிருந்தவல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்துள்ள நபர்களில், சிறப்பு நேர்வாக விதிகளை தளர்வு செய்து, புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த ஆண்டின் முதுநிலை வரிசைப்படி 42 நபர்களுக்கு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் அரசு அச்சகங்களில் ‘‘இளநிலை புத்தகம் கட்டுநர்” பதவியில் பணி நியமனம் வழங்கி அரசு ஆணையிட்டது.

அதன்படி, பூவிருந்தவல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த 42 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் அரசு அச்சகங்களில் இளநிலை புத்தகம் கட்டுனர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் இரா.வெங்கடேசன், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநர் வி.பி. தண்டபாணி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *