சிறுகதை

பார்வைகள் பலவிதம் … | வே.புனிதா வேளாங்கண்ணி

“இந்த ஒரு வாரமா மழை இப்படி கொட்டித் தீக்குதே… நம்மள மாதிரி அன்னாடங் காச்சியோட நிலைமை என்னாகுறது”, என்று புலம்பிக்கொண்டிருந்தவள்….

“வேலைக்கு வேற லேட்டாகுது”, என்று கூறிக் கொண்டே வேக வேகமாக கிளம்புகிறாள்…

“தம்பி டேய்… அங்கங்கயும் காய்ச்சலா இருக்கு… பள்ளிக்கூடம் இருக்கா இல்லையான்னு கேட்டுக்கிட்டு கிளம்பு..

நான் வேலைக்கு போய்ட்டு வரேன்..”

“அம்மா.. மழை இப்படி கொட்டுதே… நீ எப்படிப் போவே? இரும்மா மழை விடட்டும்…”

“அச்சச்சோ இப்பவே லேட்டாயிடுச்சுடா…

காலையிலேயே போய் பெருக்கி கோலம் போடலையின்னா வீட்டுக்காரம்மா பேசுவாங்கடா…”

“மழையா இருக்கில்லம்மா… எப்படி கோலம் போடுவே…? விடும்மா… அப்புறம் போலாம்”

“இல்லப்பா”, என்று சொல்லி ஒரு கவரை தலையில் போட்டுக்கொண்டே ஓட்டமும் நடையுமாக இதோ வந்துவிட்டாள்..

“என்ன மங்களம் இவ்வளவு லேட்டா வர்ர… பாத்திரமெல்லாம் காஞ்சிபோய் எப்படி இருக்கு பாரு…? சீக்கிரம் தேய்ச்சுடு”, என்று வீட்டு முதலாளியம்மா கட்டளையிட….

“ம் பாத்திரத்துக்கு கொடுக்கும் மதிப்பு கூட தமக்கு கிடையாது”, என்று எண்ணிக்கொண்டு வேகமாக வேலையில் கவனமானாள்…

இரவு செய்த இட்லிப் பாத்திரம் காய்ஞ்சிபோய் கிடக்க.. அதைத் தண்ணீர் தெளித்து ஊற‌வைத்துவிட்டு.. குப்பையை கொண்டுபோய் கொட்டிவிட்டு, வேகமாக வீடு பெருக்கி துடைத்துவிட்டு… வேலையெல்லாம் முடித்துவிட்டு “நான் வரேம்மா….” என்று சொல்லிக் கிளம்பும் போது…

“பக்கத்து கடை வரைக்கும் போய் வா”, என்று வீட்டம்மா கட்டளையிட,

அதையும் தட்டமுடியாமல் முடித்து விட்டு வெளியேறுகிறாள்… இவர்கள் வீட்டில் மட்டும் தினக் கூலியாக வாங்கிக்கொள்வது வழக்கம்.. அப்போதுதான் மகனுக்கும் தனக்கும் பசிக்கு வயிற்றுக்கு ஏதாவது போடமுடியும்..

மகனுக்கு பள்ளிப்படிப்பு செலவுக்கு இன்னும் இரண்டு வீட்டில் வேலைக்கு போவதுதான் மங்களத்தின் வேலை….

இதோ மழை வெளுக்க துவங்கிவிட்டது… வேக வேகமாக வருகிறாள் ‘வயித்துப்புள்ளக்காரப் புள்ள வேற அந்தப்பொண்ணு’, என்று மனதோடு பேசிக்கொண்டே வரவும்..

வேகமாக வந்து காரை நிறுத்தினான் சிவா ….

“வீட்டுக்குத் தானே வாங்க. உங்களை தான் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன்…..”

“இதோ தம்பி… நீங்க போங்க… நான் பாப்பாவ பார்த்துக்கிறேன்”, என்று சொல்லி.. வேகமாகப் போனவளை அழைத்து வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து வீட்டு வாசலில் விட்டு விட்டுப்போனான்..

“ம்… இவரும் மனுஷந்தான்… ஒரு வேலைக்காரிகிட்ட பேசுற மாதிரியா பேசுது… இவங்க பொஞ்சாதியும் இப்படித்தான்…. குணத்துல தங்கம்…”

“பாப்பா கவிதா”, என்று காலிங்பெல் அடிக்கப்போக கவிதாவே வந்து கதவைத் திறந்தாள்..

“என்னா தாயி கரண்ட புடுங்கிப்புட்டாங்களா…”, என்று கேட்டுக்கொண்டே அடுக்களைக்குள் நுழைய…

“என்னம்மா இது? இப்படி நனைஞ்சி இருக்கீங்க… இந்தாங்க துண்டு முதல்ல துவட்டுங்க…”

“அட போங்கம்மா… எனக்கெல்லாம் ஒன்னும் வராது….”

கவிதா சிரித்துக்கொண்டே, “சரி சரி டீ போட்டு வச்சிருக்கேன்… நாம இரண்டு பேருமே குடிப்போம்… எடுத்துட்டுவாங்க….”

“என்னம்மா நீங்க…. நான் வந்து போட்டுத் தரமாட்டேனா..? தம்பிக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது …?”

“ம்… நீங்களும் அவரும் சேர்ந்து என்ன ஒரு வேலையும் செய்ய விடுறது இல்லை… அப்புறம் எப்படி சுகப்பிரசவம் ஆகும்…”

“உங்க நல்ல மனசுக்கு நல்லதாவே நடக்கும்மா…”

“அய்யே இப்படி பாத்திரத்தையெல்லாம் நீங்களே கழுவிட்டா அப்புறம் என்பொழப்பு என்னாகுறது… என் புள்ளக்கி பீஸ் எப்படி க‌ட்டுறது…”

“ம்… நாங்க இருக்கோம்…. நீங்க கவலைப் படாதீங்க… அவனுக்கு எப்பப்ப என்னென்ன தேவைன்னு சொல்லுங்க நாங்க பார்த்துக்கிறோம்….”, என்று கவிதா சொல்ல….

“தாயி! என்ன ஒரு வேலைக்காரியாவே நீங்க நெனக்கிறது இல்ல… உங்கள மாதிரி நல்லவங்க இருக்கிறதுனாலதான் நாட்ல மழை பெய்யுது”, என்று மங்களம் சொல்ல….

தானாய் உதிர்ந்த கண்ணீரை மறைத்தபடியே…. வெளியிலிருந்த அறைக்குச்சென்றாள் கவிதா…

அவள் மனதுக்குள் அன்றைய காட்சி ஓடியது…

காதல் திருமணம் வீட்டிற்கு தெரியாமல் செய்து… அன்று வீட்டிற்குப்போய் சிவாவுடன் நின்ற போது… வேறு வேறு ஜாதி என்று தெரிந்து ஏற்றுக்கொள்ள மறுத்த தந்தை, அன்றே தலை முழுகிவிட்டேன்.. என்று சொன்னது மட்டுமல்லாமல்…. நீ இருக்கற ஊர்ல மழையே பெய்யாது என்று சொல்லி ஊர்ப்பஞ்சாயத்தையும் கூட்டி.. தன்னையும் சிவாவையும் வேண்டாதவர்கள் என்று சொல்லி ஊரை விட்டே ஒதுக்கிவைத்தார்கள்… அவர்களின் கண்ணுக்கெல்லாம் கெட்டவளாக தெரிந்த நான்… மங்களத்தின் மனதிற்கு மட்டும் எப்படி நல்லவளாகிப் போனேன்…..!!!!!

பார்வைகள் பலவிதமாக இருந்தாலும் மங்களம் போன்றவர்களின் அன்புள்ளமே ஆதரவற்றவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று கவிதா பெருமிதம் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *