போஸ்டர் செய்தி

பார்லிமெண்ட் வளாகத்தில் சோனியா, ராகுல் போராட்டம்

புதுடெல்லி, ஜூலை 11–
பாரதீய ஜனதா கட்சியினர், கர்நாடக, கோவா மாநிலங்களில் தலையிட்டு குழப்பம் விளைவிப்பதை கண்டித்து, பார்லிமென்ட் வளாகத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட, காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் இன்று போராட்டம் நடத்தினார்கள்.
கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே அரசியல் சூழல் கொந்தளிப்பாக இருக்கும் நிலையில், அண்டை மாநிலமான கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் தங்களை தனிக்குழுவாக அங்கீகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் 16 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், அங்கு, காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. இப்பிரச்னைக்கு பாரதீய ஜனதாவே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கர்நாடகா மற்றும் கோவாவில் பாரதீய ஜனதா கட்சியின் செயல்பாட்டை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
காந்தி சிலை முன்பு ‘‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’’ என்ற பதாகைகளுடன், காங்கிரஸ் எம்.பி.,க்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, ” கர்நாடகா, கோவா மாநிலங்களில் மத்திய அரசு ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றும் சக்திகளை ஊக்குவிக்கிறது,” என்று கடுமையாக சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *