செய்திகள்

பார்லிமெண்ட் தேர்தல் : அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனு அளிக்க 14–ந் தேதி வரை காலஅவகாசம்

சென்னை, பிப்.11-

பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிட அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனு அளிப்பதற்கு 14–ந்தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

அண்ணா தி.மு.க. சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 4–ந்தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டது.

ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்ப மனுக்களை வாங்கி சென்று, பூர்த்தி செய்து சமர்பித்தனர். அண்ணா தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்தனர்.

விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு 10–ந்தேதி (நேற்று) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சென்னை அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று தொண்டர்கள் கூட்டத்தால் களைகட்டியது. இந்தநிலையில் அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1,400 பேர் மனு

இதுதொடர்பாக அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

நாடாளுமன்ற மக்களைவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அண்ணா தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் 4.2.2019 முதல் 10.2.2019 வரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதன்படி ஏராளமானோர் தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணா தி.மு.க.வின் சார்பில் விருப்ப மனு பெறும் கால அளவை நீட்டித்து தருமாறு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளை ஏற்று, அண்ணா தி.மு.க.வினர் தங்களுடைய விருப்ப மனுக்களை வருகிற 14-ந்தேதி வியாழக்கிழமை மாலை 5 மணி வரை வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்ணா தி.மு.க.வில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நேற்று வரை 7 நாட்கள் விருப்ப மனு வினியோகம் நடந்துள்ளது. 40 தொகுதிகளுக்கும் இதுவரையில் மொத்தம் 1,400 பேர் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *