’பார்முலா–4 சென்னை’ கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அனைவரையும் பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:–
’பார்முலா–4 சென்னை’ கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் 2023 டென்னிஸ் தொடர், ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி– 2023, பன்னாட்டு அலைச்சறுக்குப் போட்டி –2023, ஸ்குவாஷ் உலகக் கோப்பை –2023 மற்றும் கேலோ இந்தியா –2023 ஆகியவற்றின் வெற்றிகளைத் தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக்கான சிறப்பான வளர்ச்சிப்பாதையை அமைத்து வருகிறது.
உலகத் தரத்திலான வசதிகள், உத்திமிகுந்த முதலீடுகள் ஆகியவற்றின் வாயிலாக நாம் வெறுமனே தொடர்களை மட்டும் நடத்திக்காட்டவில்லை, இந்திய விளையாட்டுத்துறை வளர்ச்சியின் முன்னோடியாக விளங்கி வருகிறோம். அதனால்தான் இந்திய ஒலிம்பிக் அணியிலும் தமிழ்நாடு தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.
எல்லைகளைத் தொடர்ந்து விரிவடையச் செய்வோம், ‘இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு’ எனும் பெருமையை உறுதியாகத் தக்கவைப்போம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.