செய்திகள்

‘பார்டர்-கவாஸ்கர்’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா அசத்தல் பந்து வீச்சு

Makkal Kural Official

104 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்

பெர்த், நவ. 23–

‘பார்டர்-கவாஸ்கர்’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் அசத்தலான பந்து வீச்சில் 104 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 49.4 ஓவர்களில் 150 ரன்னுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கேப்டன் பும்ரா பதிலடி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறினர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களுடன் தடுமாறியது. அலெக்ஸ் கேரி 19 ரன்களுடனும், ஸ்டார்க் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரோலியா

ஆல் அவுட்

இதையடுத்து 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பும்ரா தான் வீசிய முதல் பந்திலேயே அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தினார். இது அவரது 5-வது விக்கெட்டாக பதிவானது. அடுத்து வந்த நாதன் லயன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டார்க் – ஹேசில்வுட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை 100 ரன்களை கடக்க உதவினர். இவர்களை வீழ்த்த பும்ரா மாறி மாறி பவுலர்களை பயன்படுத்தினார்.

முடிவில் ஹர்ஷித் ராணா ஸ்டார்க்கின் விக்கெட்டை கைப்பற்றினார். முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 51.2 ஓவர்களில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டார்க் 26 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இந்தியா 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் 2-வது இன்னிங்ஸ் தொடங்க உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *