அமுதனும் ராஜேஷும் மதிய உணவு சாப்பிடலாம் என்று முடிவு செய்து நிறைய கடைகளுக்குச் சென்றார்கள் .ஒன்று கூட அவர்கள் மனதில் ஒட்டவில்லை.
” சாப்பிட்டால் நல்ல சாப்பாடா சாப்பிடணும். இப்ப இருக்குற ஓட்டல்ஸ் எல்லாம் பணம் சம்பாதிக்கிறதுக்கு மட்டும் தான் இருக்காங்களே தவிர யாரும் சேவை செய்யணும். மக்களுக்கு நல்ல உணவு கொடுக்கணும் அப்படிங்கறதுல நாட்டமில்லை. அதைவிட சுத்தம் சுத்தமா இல்ல”
என்று இருவரும் பேசிக்கொண்டே ஒரு பிரதான ஒட்டலுக்குள் நுழைந்தார்கள். பார்ப்பதற்குச் சிறியதாக இருந்தாலும் அந்த உணவகம் நன்றாகவே இருந்தது.
” இங்க சாப்பிடலாம்” என்று இருவரும் முடிவு செய்தார்கள். கூட்டமாக இருந்ததால் அந்த உணவகத்தில் அவர்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
“சார் ரெண்டு பேர் மட்டும் தானா? இன்று ஓடிவந்து சிப்பந்தி கேட்க
” ஆமா” என்றான் அமுதன்.
“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க சார் ” என்று சொன்னவன் சிறிது நேரத்திற்கெல்லாம்
“அந்த டேபிள் காலியாயிருச்சு அதுல உக்காருங்க” என்று சொல்ல
இருவரும் சிப்பந்தி காட்டிய இடத்தில் போய் அமர்ந்தார்கள்.
” என்ன சாப்பிடுறீங்க ?”
என்று சிப்பந்தி கேட்க
“ரெண்டு சாப்பாடு” என்று இருவரும் பதில் சொன்னார்கள். முனை மழுங்காத வாழை இலை அவர்கள் முன்னால் விரிக்கப்பட்டது. தண்ணீர் கொண்டு வந்து வைத்தான் சிப்பந்தி. தண்ணீரைத் தெளித்தார்கள். கூட்டுப் பொரியல் என்று வைத்தவர்கள்,
” சார் சாப்பாடு அன்லிமிட்டு தான். நீங்க எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம் ” என்று சொல்லி சாப்பாட்டை அள்ளிப் போட்டார்கள்.
“நல்லா சாப்பிடுங்க. உங்களுக்கு என்ன தேவையோ? அதக் கேளுங்க நான் தரேன்” என்று சொல்லிச் சென்றான் அந்தச் சிப்பந்தி
சிறிது நேரத்திற்கெல்லாம் எல்லா ஆட்கள் முன்னால் சிறிய சிறிய டப்பா வைக்கப்பட்டது.
” என்ன இது?” எதுக்காக டப்பா வைக்கிறாங்க. ஒருவேள அனாதை ஆசிரமத்துக்கு, மடத்துக்கு பணம் வசூல் பண்றோம் காசு போடுங்கன்னு கேக்குறதுக்கு இந்த டப்பாவ வைக்கிறாங்களா?
என்று குழம்பிப் போய் கேட்டான் ராஜேஷ் .
“என்னென்னு தான் பார்க்கலாமே ?”
என்று இருவரும் அங்கலாயத்திருக்க ,அத்தனைப் பேருக்கு முன்னாலும் டப்பாவை வைத்தார்கள். இவர்கள் இரண்டு பேரும் முன்னாலும் அந்த டப்பாவை வைக்கப்பட்டது.
” இது எதுக்கு டப்பா ” என்று இருவரும் கேட்க
” சார் இப்போ எல்லாம் நிறைய பேர் சாப்பாடு வாங்கி வேஸ்ட் பண்றாங்க. அதக் கொண்டு போய் கீழ தான் கொட்டுறாேம். அதுக்காக நாங்க ஒரு யோசனை பண்ணோம் .இந்த டப்பாவ வச்சுட்டா ,அவங்களுக்கு தேவையான சாப்பிட்ட சாப்பிட்டுட்டு மிச்சம் வச்சாங்கன்னா, இந்த டப்பாவுல அவங்களே பார்சல் எடுத்துட்டு போயிடலாம்ல . அதுக்கு தான் இந்த டப்பாவ வைக்கிறோம் “
என்ற அந்த சிப்பந்தி சொல்ல
” புதுசா இருக்கே என்று யோசித்தார்கள் இருவரும்.
” ஆமா சார். இந்த உணவகத்தில் எந்த உணவும் இதுவரை வீணான தில்ல. சாப்பிட்டுட்டு மிச்சம் வைக்கிறவங்க அவங்க சாப்பாட்ட பார்சலா இந்த டப்பாக்கள்ள எடுத்து போகலாம் அதுக்கு தான் இது என்று அங்கிருந்தவர் சொல்ல இருவருக்கும் இது புதிதாக இருந்தது.
ராஜேஷ் ,அமுதன் இருவர் அருகில் இருந்த ஒரு நபர்
அந்த டப்பாக்களில் சாப்பாட்டை முதலிலேயே எடுத்து வைத்தார்.
” என்ன சார் பண்றீங்க. சாப்பிட்ட மிச்சத்த தானே எடுத்துப் போகணும் ” என்று ராஜேஷ் கேட்க
“சாப்பிடுறதுக்கு முன்னாடியே இந்த டப்பாவில சாப்பாட்ட எடுத்து வச்சிட்டம்னா, ராத்திரிக்கும் இதை பயன்படுத்தலாமே ?அதுக்குத்தாங்க முன்னாடியே எடுத்து வைக்கிறேன்
என்று அவன் சொன்ன பாேது இருவரும் விக்கித்து நின்றார்கள்.
” இவனுக அறிவாளின்னு நினைச்சு நம்மகிட்ட டப்பாவ கொடுக்குறாங்க. நாம இவனுகளை விட அறிவாளிகள்னு நிரூபிக்க வேண்டாமா? அதுதான் டப்பாவ வாங்குன உடனே சாப்பாட்டையும் கூட்டுப் பொரியலையும் எடுத்து வச்சிட்டேன். கைப்படாம இருந்தாத் தான ராத்திரி வரைக்கும் தாங்கும் ; அதுதான் இந்த ஐடியா ” என்று அவன் மறுபடியும் சொன்னபோது
” அடப்பாவிகளா ஓட்டல் காரன் நல்லது செய்ய நினைச்சா, அதுலயும் இப்படி ஒரு பித்தலாட்டமா ? உருப்பட்டுருவ”
என்று நினைத்துக் கொண்டு அமுதனும் ராஜேஷும் சாப்பிட ஆரம்பித்தார்கள்
அவர்களின் முன்னால் இருந்த டப்பாக்களையும் நிரம்பிக் கொண்டிருந்தார்கள் .