செய்திகள்

பாரா ஒலிம்பிக்: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து 3வது முறையாக பதக்கம் வென்று சாதனை

Makkal Kural Official

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத்குமார்

பாரீஸ், செப். 4–

பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட வீரர்கள் பலரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாட்மிண்டன் பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், நித்யஸ்ரீ சிவனும் பாட்மிண்டன் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். இவர்களைத் தொடர்ந்து உயரம் தாண்டுதல் பிரிவில் கலந்து கொண்ட தங்கவேலு மாரியப்பன் வெண்கலம் வென்று அசத்தினார். இதனால் தொடர்ச்சியாக மூன்று பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.

தங்கவேலு மாரியப்பன் தனது முதல் பாரா ஒலிம்பிக் போட்டியில் 2016 ரியோ டி ஜெனீரோவில் கலந்து கொண்டார். உயரம் தாண்டுதல் டி42 பிரிவில் கலந்து கொண்ட அவர் தங்கப்பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கிலும், மாரியப்பன் கலந்து கொண்டு தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அதைப்போலவே இம்முறையும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. உயரம் தாண்டுதலில் டி63 பிரிவில் கலந்து கொண்டார்.

இந்திய வீரர் சரத்குமார்

வெள்ளிப் பதக்கம்

அவருடன் மற்றொரு இந்திய வீரரான சரத்குமார் கலந்து கொண்டார். இருவரும் குறைந்தபட்ச உயரமான 1.81 மீட்டரை எளிதாக தாண்டினர். இதற்கு அடுத்த சுற்றில் 1.85 மீட்டர் உயரத்தை மாரியப்பன் தாண்டி முதலிடம் பிடித்தார். ஆனால், 1.88 மீட்டர் உயரம் தாண்டுதலில் தங்கவேலு மாரியப்பன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதல் இரு இடங்களை முறையே அமெரிக்க வீரர் ஏல்ரா, இந்திய வீரர் சரத்குமார் ஆகியோர் தாண்டினர். இதற்கு அடுத்த சுற்றுகளில் தங்கவேலு மாரியப்பன் உயரம் தாண்ட முடியவில்லை. ஆனால் அமெரிக்க வீரர் ஏல்ரா 1.94 மீட்டர் தாண்டி முதல் இடம் பிடித்தார். இந்திய வீரர் சரத்குமார் இரண்டாம் இடத்தை பிடித்தார். உயரம் தாண்டுதலில் சரத்குமாருக்கு வெள்ளிப் பதக்கமும் மாரியப்பனுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது.

இந்த வெற்றிகள் மூலம் பாரீஸ் பாரா ஓலிம்பிக் போட்டி பதக்க பட்டியலில் இதுவரை இந்தியா மூன்று தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என 18 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது. கடந்த டோக்யோ பாரா ஒலிம்பிக் போட்டியிலும் இதே அளவுதான் இந்தியா பதக்கத்தை வென்றிருந்தது. இதனிடையே வெள்ளி பதக்கம் வென்ற சரத்குமாருக்கும், வெண்கல பதக்கம் வென்ற தங்கவேலு மாரியப்பனுக்கும் இந்தியா முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தடைகளை கடந்த

மாரியப்பன்

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியவடகம்பட்டி எனும் குக்கிராமம்தான் இவரது ஊர். தங்கவேலு, சரோஜா தம்பதியின் மூத்த மகனான மாரியப்பன், 5 வயதில் பள்ளிக்கு நடந்து சென்றபோது பேரிடியாக வந்து மோதியது பேருந்து. அந்த விபத்தில் வலது காலின் முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதி முற்றிலும் சேதமானது. மாரியப்பனின் தந்தை குடும்பத்தை விட்டுச் சென்ற நிலையில், ஒற்றை ஆளாக காய்கறி விற்றும், கூலி வேலை செய்தும் குழந்தைகளை வளர்த்தார் சரோஜா.

காலை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காத மாரியப்பனுக்கு, விளையாட்டின் மீது தீராத தாகம் இருந்தது. முதலில் கைப்பந்து (வாலிபால்) விளையாடி வந்தார். இவரது திறமையை கண்டறிந்த உடற்கல்வி ஆசிரியர், உயரம் தாண்டுதலில் கவனம் செலுத்துமாறு ஊக்குவித்தார்.

படிப்பு, விளையாட்டு என ஒருபக்கம் இருந்தாலும், குடும்ப சூழலை உணர்ந்து, தாய்க்கு உதவும் வகையில் தினமும் காலையில் செய்தித்தாள்கள் போட்டும், விடுமுறை நாட்களில் கட்டுமானப் பணிக்குச் சென்றும் அதில் கிடைத்த பணத்தைக் குடும்பத்திற்கு அளித்தார்.

பள்ளி அளவில் மட்டுமன்றி தேசிய அளவிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன், 2013-ல் பயிற்சியாளர் சத்யநாராயணனை சந்தித்தார். பின்னர் அவரால் பட்டைத்தீட்டப்பட்ட மாரியப்பன், 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்று உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.

2020 டோக்கியோ பாராலிம்பிக்கிலும் களமாடினார் மாரியப்பன். போட்டியின்போது பெய்த மழை காரணமாக அவரால் தங்கம் வெல்ல முடியவில்லை. எனினும் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார் மாரியப்பன். பாரிஸ் பாராலிம்பிக்கிலும் ஜொலித்து, ஹாட்ரிக் பதக்கம் வெல்ல பல கட்ட பயிற்சிகளை மேற்கொண்ட மாரியப்பன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

முதலமைச்சர் வாழ்த்து

மூன்றாவது முறையாகப் பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள்.

தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள தங்கவேலு மாரியப்பனுக்கு இந்தியா முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *