செய்திகள்

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

பிரவீன்குமாருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

டோக்கியோ, செப். 3–

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றதை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16 வது பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு பிரிட்டன் வீரர் ஜானதனுடன் கடும் போட்டி நிலவியது. இறுதியில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

முதலமைச்சர் பாராட்டு

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “சாதனைகளை படைப்பதும் முறியடிப்பதுமாக டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவின் வெற்றி பயணம் தொடர்கிறது. புதிய ஆசிய சாதனையோடு உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற பிரவீன் குமாருக்கு பாராட்டுக்கள். எதிர்காலத்தில் பிரவீன்குமார் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற 18 வயதே ஆன பிரவீன்குமார் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் ஆவார். இதன்மூலம் நடப்பு பாராலிம்பிக் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பிரவீன்குமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *