செய்திகள்

பாரா ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியா வீரர்கள் 7 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்கள் பெற்று அபாரம்

வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து

ஹாங்சோ, அக். 24–

பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தியா வீரர்கள் 7 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை படைத்து வருகிறது.

சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நேற்று முன்தினம் முதல் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த முறை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சார்பில் 13 போட்டிகளில் 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில், தற்போது நடைபெறும் போட்டியில் இந்தியா சார்பில், 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் இந்தியாவில் இருந்து 143 பயிற்சியாளர்களும் சீனா சென்றுள்ளனர். இந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் அங்கு நடைபெறும் 17 விதமான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில், பாரா ஆசிய போட்டியில் இந்தியா வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இதில், ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம், ராம் சிங் வெண்கலமும் வென்றார். ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் நிஷாத் குமார் 2.02 மீட்டர் உயரம் பாய்ந்து தங்கம் வென்றார். அதேபோல், ராம் பால் 1.94 மீட்டர் உயரம் பாய்ந்து வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்ட் எஸ்எச்1 இறுதிப் போட்டியில் அவனி லெகாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 249.6 புள்ளிகளுடன் கேம்ஸ் சாதனையை முறியடித்து, இந்தியாவின் நான்காவது தங்கத்தை உறுதி செய்தார். அதேபோல் ஜூடோவில் இந்தியா இரண்டு பதக்கங்களை பெற்றது.

7 தங்கம், 7 வெள்ளி,

6 வெண்கலப் பதக்கம்

இதைதொடர்ந்து, ஆடவர் எப்51 கிளப் எறிதல் போட்டியிலும் இந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.அதன்படி, எப்51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்றார். தொடர்ந்து, தரம்பிட் , அமித் குமார் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இந்த போட்டி தொடரில் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் தாமா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் தற்போது வரை பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 7 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் வென்று 4வது இடத்தில் இந்தியா உள்ளது.

மாரியப்பனுக்கு

பிரதமர் வாழ்த்து

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளின் உயரம் தாண்டும் ஆட்டத்தில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பிரதமர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஆண்கள் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பது அவரது திறமைக்கும் உறுதிக்கு ஒரு சான்றாகும். இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதே உயரம் தாண்டும் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீரர் சைலேஷ் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்கள் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் அவரது செயல்திறன் அசாதாரணமானது. அவரது உறுதியும், கடின உழைப்பும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் வாழ்த்து

இந்நிலையில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டும் ஒருமுறை பெருமை தேடித் தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *