சென்னை, செப். 5–
பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் இந்தியா சார்பில் 84 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர். அதன்படி மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதே மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் பேட்மிட்டன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீ சிவன் என்ற வீராங்கனையும் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இந்நிலையில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீராங்கனைகளான துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யஸ்ரீ சிவன் ஆகியோருக்கு சென்னை விமான நிலையத்தில் கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து துளசிமதி முருகேசன் பேசுகையில், “பேட்மிட்டன் பேட்டை பிடிப்பதில் அப்பா சொல்லிக் கொடுத்ததில் இருந்து எனது கனவு பாரா ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பது தான். இதற்காக அப்பா நிறைய தடைகளை தாண்டி கஷ்டப்பட்டு இருக்கிறார். அதை எல்லாம் தாண்டி கனவு நிறைவேறி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சிறு வயதிலிருந்து பயிற்சி பெற்ற பெண் காஞ்சிபுரம் எஸ்.டி.டி.ஏ. ஸ்டேடியத்திலும், அரசின் எல்லா திட்டங்களாலும் அதில் பயனடைந்திருக்கிறேன். தற்போது கலநடை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருப்பதால் இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்காக விடுமுறை வேண்டும் என அமைச்சர் உதயநிதியைச் சந்தித்து கோரிக்கை வைத்தோம். இதற்காக அவரும், உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டியும் அரசாணையைப் பெற்றுக் கொடுத்தனர்.
பாரா ஒலிம்பிக் வெற்றிக்குப் பின் மிகப்பெரிய குழுவினர் உள்ளனர். அப்பா, தமிழக அரசு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என எல்லாருக்கும் சேர்த்துக் கிடைத்த வெற்றி ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்பது கனவு. அதில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது என்பது ரொம்ப பெரிய விஷயம்” எனத் தெரிவித்தார்.