செய்திகள்

பாரத் மேலாண்மை மாணவர்களுக்கான சிறப்பு பயிலரங்கம்

கற்றலும், தொழில்நுட்பமும் வளர்ச்சியை தரும்: மக்கள் குரல் ஆசிரியர் அறிவுரைசென்னை, ஜூன் 18–

இடர்கள் ஏற்படும்போது புதிய வாய்ப்புகளும் உருவாகும் என்பதற்கேற்ப, பெருந்தொற்று காலத்திலும் ஊடகங்கள் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சியை சாத்தியமாக்கும் என்று மக்கள் குரல் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் கூறினார்.

பாரத் உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் வணிகம் மற்றும் மேலாண்மை பள்ளி சார்பில் நடைபெற்ற மாற்றத்துக்குள்ளாகும் மக்கள் தொடர்பு ஊடகங்கள் எனும் தலைப்பிலான கருத்தரங்கில், கவுசிகா ராமன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு பேராசிரியர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மக்கள் குரல் மற்றும் டிரினிட்டி மிரர் நாளிதழ்களின் ஆசிரியர் ஆர். முத்துக்குமார் பங்கேற்று பேசியதாவது:–

மாற்றம் ஒன்றே மாறாதது

மாறிவரும் மக்கள் தொடர்பு ஊடகங்கள் குறித்து பேச அழைத்த துறைத் தலைவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் வாழ்விலிருந்து இதற்கு எடுத்துக்காட்டுகளை கூற முடியும் என்று கருதுகிறேன். +2 வகுப்பு முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது முதல் பேட்ஜில் நான் படித்தேன். அப்போதெல்லாம் பால்பாயிண்ட் பேனாவை தேர்வு எழுத பயன்படுத்த முடியாது. அதற்கு தடை இருந்தது. இங்க் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு பிறகு மாற்றம் ஏற்பட்டது.

அதேபோல், நான் கல்லூரி முடித்துவிட்டு எனது தந்தை நடத்தி வந்த அச்சகத்தில் பணிக்கு சேர்ந்தேன். எனக்கு படிக்கும் பழக்கம் நிறைய இருந்தது. அதன்மூலம் அங்கு நிறைய கற்றுக் கொண்டேன். அதன்பிறகு 1986 ஆம் ஆண்டில் பத்திரிகை துறையில் சேர்ந்தேன். எனக்கிருந்த படிக்கும் பழக்கத்தால் முதலில் ‘புரூப் ரீடர்’ பணியில் சேர்ந்தேன். பின்னர் புகைப்படம் எடுக்க ஆர்வம் கொண்டு, பத்திரிகையின் புகைப்பட செய்தியாளராக முடிவு செய்தேன். அங்கும் நிறைய தவறுகள் செய்து கற்றுக்கொண்டேன்.

ஊடகத்தில் மாற்றங்கள்

அப்போதெல்லாம், டிஜிட்டல் கேமராக்கள் இல்லை. படங்கள் எடுத்தால், அதனை பிரிண்ட் போட நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். அதேபோல், பத்திரிகை துறையில் அச்சுக்கோர்த்து செய்திகளை உருவாக்க, அதிகமான நேரம் எடுத்துக்கொள்ளும். அந்த நேரத்தில் 1990 வாக்கில் விண்டோஸ் 3 கணினி மூலம் டிடிபி அறிமுகம் ஆனது. அதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு ஆப்பிள் கணினி அறிமுகம் ஆனது. அந்த காலகட்டங்களில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால், 3 மணி நேரம் ஆகக்கூடிய ஒரு செய்தி பணியை 15 நிமிடத்தில் முடிக்க முடிந்தது.

தொடக்க கால கணினிகள் 15 எம்பி திறன் மட்டுமே கொண்டிருந்தது. அதுவே பெரிய அளவிலான முன்னேற்றத்தை பத்திரிக்கை துறையில் ஏற்படுத்தியது. இப்போதெல்லாம் டெராபைட் (terabyte -1000 ஜிபி) அளவில் கணினிகள், சூப்பர் கம்ப்யூட்டர்கள் எல்லாம் வந்துவிட்டது. 2003 ஆம் ஆண்டில் கூகுள் வந்த பிறகு, அனைத்து தேடல்களும் பணிகளும் மிகவும் எளிதாகிப் போனது.

1995 ஆம் ஆண்டில் டிரினிட்டி மிரர் ஆங்கில பத்திரிகை தொடங்கப்பட்ட பிறகு, அதனை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினேன். சிறுவயது முதல் ‘இரும்புக் கை மாயாவி’ போன்ற படக்கதை புத்தகங்கள் முதற்கொண்டு அனைத்தையும் படிக்கும் பழக்கம் இருந்ததால், ஒரு செய்தியின் 300 அல்லது 400 சொற்களை 8 சொற்களுக்குள் தலைப்பில் சொல்லும் ஆற்றல் எளிதாக கிடைத்தது.

முன்னேற்ற வாய்ப்புகள்

இப்படியாக எந்த ஒரு துறைக்கும் மாற்றமும் தொழில்நுட்ப பயன்பாடும் வளர்ச்சியை கொடுக்கும் என்றாலும், மக்கள் தொடர்பு ஊடங்கங்கள் இன்னும் அதிக அளவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் என்பதே உண்மை. இப்போதும் பெருந்தொற்று காலத்தில் புதிய புதிய மாற்றத்தை உருவாக்கும் தொழில்நுட்பமும் வந்து கொண்டே இருக்கிறது. அதன் மேம்பாடு ஊடகத் துறையிலும் பெரிய அளவிலான மாற்றத்தை கொண்டு வரும் என்று உறுதியாக கூறலாம்.

இப்போதே, நமது ‘ஷாப்பிங்’ அனுபவங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. நாம் எப்போதும் இனி 30 ஆண்டுகள் பின்னோக்கி போகவே முடியாது எனும்போது, முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதே சிறப்பானது. அதற்கு, தொடர் கற்றல், தொழில்நுட்ப பயன்பாட்டை கைக்கொள்ளுதல் ஆகியவற்றை தொடர்ந்து செயல்படுத்தும்போது, வளர்ச்சி சாத்தியமாகும் என்பது உறுதி என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *