லக்னோ, மார்ச் 26–
பாரதீய ஜனதா கட்சி இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால், இளைஞர்களுக்கு வேலையே கிடைக்காமல், திருமணம்கூட நடக்காது என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜகவும், சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணியும் நேருக்குநேர் மோதுகின்றன. இந்நிலையில், அகிலேஷின் சொந்த ஊரான எட்டாவா மாவட்டம் சைஃபை கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஹோலி விழாவில் அவர் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில், அகிலேஷ் யாதவ் பேசியதாவது:–
ஏன் திருமணம் நடக்காது?
ஹோலி பண்டிகையானது மகிழ்ச்சியாக கொண்டாடவும், ஒருவரையொருவர் அரவணைக்கவும் நமக்கான வாய்ப்பாக உள்ளது. அநீதிக்கு எதிராக போராடுவோம் என்று என்னுடன் நீங்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும். ஹோலி என்பது பல வண்ணங்கள் நிறைந்த பண்டிகை. ஆனால், சிலருக்கு ஒரு வண்ணத்தை தவிர மற்றவை பிடிக்காது.
இந்த மக்களவைத் தேர்தல் எனக்கு மட்டுமின்றி உங்களின், நாட்டின் எதிர்காலத்திற்கானது. ஜனநாயகத்திற்கான தேர்வு. இதில், ஜனநாயம் வென்றால் மட்டுமே நமக்கு கிடைத்த உரிமைகள் நிலைத்திருக்கும்.
உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசியாத அரசு துறைகளுக்கும் ஆதித்ய நாத் அரசு எந்தத் தேர்வையும் நடத்தவில்லை. அரசு வேலை கொடுத்தால், அதில் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதால் வேண்டுமென்றே வினாத்தாளை கசிய விட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் நீடித்தால், வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வயதாகி திருமணம்கூட நடக்காது என்று தெரிவித்துள்ளார்.