செய்திகள்

பாரதீய ஜனதா அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது

டெல்லி, பிப். 15–

தேர்தல் பத்திரங்கள் திட்டம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது என்பதால், திட்டமே செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நெருங்கும்போது, அரசியல் கட்சிகள் தெருமுனைப் பிரசாரத்திலிருந்து, பிரமாண்ட மாநாடு வரை இலவசங்கள், ஒட்டுக்குப் பணம் எனக் காசை வாரி இறைக்கும் போதெல்லாம், இவர்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தார்கள் என கேள்வியெழும்.

தேர்தல் பத்திரம் என்பதென்ன?

இந்த நிலையில் தான் 2018-ல் `தேர்தல் பத்திரம் (Electoral Bonds)’ என்ற திட்டத்தை ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, ஓர் அரசியல் கட்சிக்கு ரூ.2,000-க்கு மேல் ஒருவர் நன்கொடை வழங்கினாலே, அது பற்றிய விவரங்களை வருமான வரித்துறைக்கு சம்பந்தப்பட்ட கட்சி கட்டாயம் தெரிவித்தாக வேண்டும். அதேபோல், ஒரு நிறுவனம் தனது லாபத்திலிருந்து அதிகபட்சமாக 7.5 சதவிகிதத்தை நன்கொடையாக அரசியல் கட்சிகளுக்கு அளிக்கலாம்.

அதிலும், எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி அளிக்கப்பட்டது என்ற விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவிக்க வேண்டும் என்பது நிறுவனங்கள் சட்டத்தின்படி கட்டாயம் என இருந்தது.

ஆனால், 2018-ல் தேர்தல் பத்திரம் திட்டத்தை பா.ஜ.க கொண்டு வந்த பிறகு, யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற வெளிப்படைத்தன்மை இருட்டடிக்கப்பட்டு விட்டதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் ரகசியமாக நிதி வழங்குவதற்கான திட்டம் என்றும் விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

ரூ.16 ஆயிரம் கோடி வசூல்

காரணம், இந்த தேர்தல் பத்திரம் திட்டம் மூலம், தனிநபரோ, ஒரு நிறுவனமோ பணத்தை வங்கி மூலம் தேர்தல் பத்திரமாகப் பெற்று, அதை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். பின்னர், அந்தத் தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் நிதியாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால், இதில் யார் நிதி கொடுத்தார்கள் என்பது ரகசியமாக வைக்கப்படுகிறது. மேலும், யார் பணம் கொடுத்தார்கள் என்பதை அறிவதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டம் வந்த பிறகு இதுவரை, 26,939 தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.15,922 கோடி நிதி அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக, ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர் லோகேஷ் பத்ரா என்பவர் எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகத் தகவல் பெற்றிருக்கிறார். அதில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ் அதிக அளவில் நிதி, ஆளும் பா.ஜ.க-வுக்குத்தான் போயிருக்கிறது.

இப்படியிருக்க, தேர்தல் பத்திரம் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்களும் குவிந்தன. இந்நிலையில், பாரதீய ஜனதா அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர சட்டத்திற்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து விசாரணை நடத்தியது.

அரசியல் அமைப்புக்கு விரோதம்

அப்போது 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் 2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட நிதிகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி விசாரணை மேற்கொண்டது. இறுதியாக நவம்பர் 2-ம் தேதி, தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்நிலையில் இன்று காலை 10:30 மணியளவில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நீதிமன்ற அமர்வுக்கு வந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் கொண்ட ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என்று கூறி, அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம் என்றும் கூறி உள்ளது.

திருத்தங்களும் ரத்து

அத்துடன், தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்துக்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், ஐ.டி. சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்களும் ரத்து செய்யப்படுகிறது.

2019 முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி ஏப்ரல் 13 ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் 5 பேர் கொண்டு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *