செய்திகள்

பாரதீய ஜனதாவினர் கோவிலைக்கட்டி மக்களை திசை திருப்புகிறார்கள்: ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜன.24-

பாரதீய ஜனதாவினர் கோவிலை கட்டி மக்களை திசைதிருப்ப பார்க்கிறது’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., எழுதிய ‘உரிமைக்குரல்’, ‘பாதை மாறா பயணம் (பாகம்-3), ‘தி மேன்- மெசெஜ் (ஆங்கிலம்), ‘மை வாய்ஸ் பார் தி வாய்ஸ்லெஸ்’ (ஆங்கிலம்) ஆகிய 4 புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ‘இந்து’ என்.ராம், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

டி.ஆர்.பாலு எழுதிய புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

17 வயதில் கருணாநிதியின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்த பாலுவிற்கு, இப்போது 80 வயது. இன்றைக்கு வரைக்கும், ‘ஒரே கொடி – ஒரே இயக்கம் – ஒரே தலைமை’ என்று கொள்கைப் பிடிப்போடு இயங்கிக் கொண்டு இருக்கிறார். கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் எம்.பி.யாக, 12 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்திருக்கிறார். நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தி.மு.க.வின் குரலை அவர் கம்பீரமாக ஒலித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஓடும் தங்க நாற்கரச் சாலையாக இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் பாலங்களாக இருந்தாலும், இது அனைத்துமே பாலுவின் திறமைக்கான மகுடங்கள். ஆனால், இதையெல்லாம் விடப்பெரிய சாதனையாக வந்திருக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. அதுதான், அண்ணாவின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம். கருணாநிதி வற்புறுத்தலால் இந்தத் திட்டம் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் அடுத்தடுத்து வந்த அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாக அந்தத் திட்டம் முடக்கப்பட்டது. அந்தத் திட்டம் நிறைவேறி இருந்தால், இந்தியாவின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாக இன்றைக்கு அமைந்திருக்கும்.

யார் ஆட்சியில்

அமரக்கூடாது…

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது, யார் ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக நடைபெறும் தேர்தல். கடந்த பத்தாண்டுகாலமாக, மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதையும் செய்யாமல், பேரிடர் பாதிப்புக்குக் கூட நிதி ஒதுக்காமல் இறுதிக் காலத்தில் ஒரு கோவிலைக் காட்டி, மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறது பாரதீய ஜனதா தலைமை. தேர்தலைச் சந்திக்க இருக்கும் பாரதீய ஜனதாவிற்கு மக்களிடம் சொல்வதற்குச் சாதனை என்று எதுவும் இல்லை. அதனால்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோவிலை, அவசர அவரசமாகத் திறந்து, எதையோ சாதித்துவிட்டதாகக் காட்ட நினைக்கிறார்கள். இதுமாதிரியான திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் கொடுப்பார்கள். இது உறுதி.

எல்லா வகையிலும் மக்களை நசுக்கிய ஆட்சி, பாரதீய ஜனதா ஆட்சி. அந்தக்கோபம் மக்கள் மனதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணியை அமைத்திருப்பது போன்று, இந்தியா முழுமைக்கும் வலுவான கூட்டணியை உறுதி செய்தாக வேண்டும். இந்தியா கூட்டணிக் கட்சிகள், தங்களுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அந்தந்த மாநிலங்களில் நடத்தி வருவதாக செய்திகள் வருகிறது. விரைவில் எல்லாம் நல்லபடியாக முடிந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு மத்திய அரசை உருவாக்க நாமெல்லாம் தேர்தல் களத்தில் நுழைகிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், டி.ஆர்.பி. ராஜா, தி.மு.க. எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *