சினிமா செய்திகள்

‘‘பாரதிராஜாவுக்கு ‘பால்கே’ விருதை வழங்குங்கள்’’ : மணிரத்னம், கமல் உள்பட 40 பேர் மத்திய அரசுக்கு கோரிக்கை

* 43 ஆண்டில் 42 திரைப்படங்களை இயக்கியவர்

* 50-க்கும் மேல் நடிகர்களை அறிமுகப்படுத்தியவர்

‘‘பாரதிராஜாவுக்கு ‘பால்கே’ விருதை வழங்குங்கள்’’ :

மணிரத்னம், கமல் உள்பட 40 பேர் மத்திய அரசுக்கு கோரிக்கை

தகவல் ஒலிபரப்பு அமைச்சருக்கு கடிதம்

சென்னை, ஜூலை 18–

டைரக்டர் பாரதிராஜா நேற்று தன் 78-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். சினிமாவில் சாதனை படைத்திருக்கும் 43 ஆண்டு அனுபவசாலி– திறமைசாலியான அவருக்கு தாதா சாகிப் பால்கே விருதை வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கமல்ஹாசன், மணிரத்னம், வைரமுத்து உள்ளிட்டோர் பிரபல கலைஞர்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

பார்த்திபன், தனுஷ், சேரன், பாலா, பாண்டிராஜ், வசந்தபாலன், சமுத்திரகனி, கலைப்புலி எஸ்.தாணு, வெற்றிமாறன், எஸ்.பி.ஜனநாதன், அகத்தியன் படத் தயாரிப்பாளர் தனஞ்செயன், எடிட்டர் பி.லெனின், சுகாசினி மணிரத்னம், ஞானராஜசேகரன், சீனு ராமசாமி, சசிகுமார் உள்பட சுமார் 40 தேசிய விருது பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த மனுவை அனுப்பி உள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

“இயக்குனர் பாரதிராஜா, தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர். 43 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சிவாஜி கணேசன், ராஜேஷ்கன்னா, கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியவர். தமிழ் சினிமாவை முதன் முதலாக கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர். 50-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாத் துறையின் நலனுக்காக ஊக்கத்துடன் உழைத்து வருகிறார். பாரதிராஜாவுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான “தாதாசாகிப் பால்கே” விருதை இந்த ஆண்டு வழங்குவதற்குப் பரிசீலிக்க வேண்டுகிறோம். இது அவருடைய மகத்தான பங்களிப்புக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்ட முறையான அங்கீகாரமாகவும் இருக்கும்”

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *