நாடும் நடப்பும்

பாம்பின் பெருமையை போற்றும் மாநகரம் சென்னை

50–வது ஆண்டில் சென்னை பாம்பு பண்ணை


ஆர். முத்துக்குமார்


பாம்பு என்றால் படையும் நடுங்கும்! ஆனால் இன்றோ, உலகமே உலக பாம்புகள் தினத்தை கடைப்பிடிக்கிறது. நம் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கும் பாம்புகளின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளவே அப்படி ஓர் தினத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதன் சிறப்பை சென்னைவாசிகள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்!

நாம் விவசாயத்தைச் சார்ந்த நாடு, நமது பொருளாதாரம் விவசாயத்தை நம்பி இருப்பதை உணர்ந்தவர்கள், உணவு தானியத்தின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள்.

ஒருவேளை உணவை, ஆறு எலிகள் சாப்பிட்டு அழித்து விடுமாம். மேலும் 20 மடங்கு உணவை வீணடித்து விடுகின்றனவாம். ஆகவே எலிகள் நம் வாழ்க்கையை முற்றிலும் நாசப்படுத்தி விடும் சக்தி கொண்டிருக்கிறது.

நகரப்பகுதிகளில் எலிகள் அதிகம் இல்லாதது போல தெரியலாம். ஆனால் அதன் இனப்பெருக்க வேகம் அச்சுறுத்தும் விதத்தில் இருக்கிறது. அதை கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் அவ்வூர் மக்கள் அச்சத்துடன் பார்த்து வருகிறார்கள். சில வீடுகளில் கார் நிறுத்தப்பட்டு இருக்கும் ‘கேரேஜ்’ கதவை திறந்தால், பல்லாயிரம் பெருச்சாலிகள் படையாய் அலறியடித்து ஓடுவதை சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில் காணமுடிகிறது.

ஆஸ்திரேலியாவில் விவசாய நிலப்பகுதிகளில் அதிகமாக இருந்து வந்த சாரைப்பாம்புகளின் எண்ணிக்கை குறைந்ததால் தான் எலிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது என அங்குள்ள நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எலிகள் தான் சாரைப்பாம்புகளின் பிடித்த உணவு. சராசரியாக ஒரு பாம்பு வருடத்தில் 1000 எலிகள் வரை சாப்பிட்டு விடுமாம்! ஒரு எலி ஆண்டிற்கு 10 கிலோ தானியங்களை சாப்பிடும்!

இப்பொழுது புரிகிறதா, பாம்பு ஏன் விவசாயிகளின் நண்பன் என்று? ஆகவே இனியாவது நாம் செல்லும் பாதையில் பாம்பினை கண்டால் அதை உடனே அடித்து வதம் செய்து விடுவது என்ற மனநிலையை மாற்றிக் கொள்வோம். நமது வாழ்வியல் சமநிலை ஏற்பாட்டில் பாம்பின் பங்கு மிக அவசியமானதாகும்.

3500 வகை பாம்புகள்

மேலும் உலகில் 3500 பாம்பினங்கள் உள்ளனவாம், அதில் 250 இனங்கள் மட்டுமே விஷமுள்ளவை. நம் நாட்டிலோ 300 இன பாம்புகள் உள்ளன, அவற்றில் 52 இனங்கள் மட்டுமே விஷம் கொண்டிருக்கிறது.

சென்னையை சுற்றிய அடர் காட்டுப் பகுதிகளாக இருந்த நன்மங்கலம், செம்பரம்பாக்கம், வளசரவாக்கம் போன்ற பகுதியில் பாம்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கிறது. வளரும் நகரங்களில் குடியிருப்பு கட்டுமானம் அதிகரிப்பால் பாம்புகளின் அழிவு அதிகரித்தது.

இதில் சென்னை நகரம் மிக வித்தியாசமாக பாம்புகளைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்யவும், பாம்புகளின் விஷத்தை கொண்டு பல்வேறு மருந்துகள் தயாரிக்க உயர் ஆராய்ச்சிகள் செய்யவும் சென்னை பாம்பு பண்ணையையும் உருவாகியுள்ளது.

ரோமுலஸ் வித்தேக்கர் 1972–ல் இந்த பாம்பு பண்ணையையும், முதலை உட்பட பல்வேறு ஊர்வனங்களை பாதுகாத்து ஆய்வு செய்யத் துவக்கினார்.

இதில் முதலைப்பண்ணையை மட்டும் மகாபலிபுரம் அருகாமைக்கு மாற்றி விட்டார். தற்போது பல்வேறு இன பாம்புகள் பார்வையாளர்கள் பாதுகாப்பாக பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது கிட்டத்தட்ட 35 இன பாம்புகள் மற்றும் ஆமைகளும், ராட்சத பல்லி இனமும் இங்கு உள்ளன.

லாவகமாகப் பிடித்து விஷம் எடுக்கிறார்கள்…

இங்குள்ள பாம்புகளை கண்ணாடி கூண்டில் பார்த்து ரசிக்க முடியும். மேலும் அது தனது இயற்கை சூழலில் எப்படி வாழ்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

வாரம் ஒரு நாள் விஷப் பாம்புகளை லாவகமாக பிடித்து விஷம் எடுப்பதையும் கண்கூடாக பார்க்க முடியும். சிறுவர்களுக்கும், சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இது வித்தியாசமான அனுபவமாகவே இருக்கிறது.

மேலும் உலகிலேயே இப்படி ஒரு நகரின் பரபரப்பான மையப்பகுதியில் ஒரு பாம்பு பண்ணையும், ஆராய்ச்சி பிரிவும் அமைந்து இருப்பது சென்னையில் மட்டும் தான்.

கட்டண வசூல் பாதிப்பு

1972–ல் துவங்கிய இந்த கிண்டி பாம்பு பண்ணை தற்போது சென்னை பாம்புப் பண்ணை என்று அழைக்கப்படுகிறது, கடந்த 49 ஆண்டுகளாக பல லட்சம் பார்வையாளர்களுக்கு பரவசத்தையும் வாரி வழங்கி வருகிறது.

கடந்த 16 மாதங்களாக பார்வையாளர் வருகையின்றி இருப்பது கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தான் என்பதையும் அறிவோம். பார்வையாளர்கள் வருகை நிறுத்தப்பட்டுள்ளதால் பார்வையாளர் கட்டண வருவாயும் நின்றுவிட்டது.

இதை தமிழக அரசு மனதில் கொண்டு இந்த இயற்கை எழில் நிரம்பிய சிறுவர் மட்டும் சுற்றுலா பயணிகளின் அபிமான பூங்காவை எப்போதும் போல் இயங்க நிதிஉதவிகள் செய்தாக வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் கோவிட் பாதிப்படைந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளை தற்போது செய்து வருவதால் இதுபோன்ற சிறப்பான கட்டமைப்புகளுக்கு உதவி செய்ய முடியாத நிலை உருவாகியிருப்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களையும், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு விசேஷ அழைப்பு தந்து 50–வது ஆண்டில் நுழைய இருக்கும் சென்னை பாம்பு பண்ணையில் உள்ள உயிரினங்கள் மற்றும் ஆய்வுப் பணிகள் சிறப்பாக தொடர நிதி சேர்த்து உதவிட முன்வர வேண்டும்.

மேலும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் பாம்பு நடமாட்டம் இருந்தால் அதை உயிருடன் பிடித்து வனப்பகுதிகளில் விட உதவி மையங்களும் அமைக்க யோசிக்கலாம்.

அடித்துக் கொல்வது தவறு

இளைஞர்கள் பாம்பை கண்டு பயந்து அதை அடித்துக் கொன்று விடுவது தவறு என்று புரிந்து கொள்ள ஏதுவாக புரிதல் பாடத்தையும் வீடியோ படமாக எடுத்து ஒளிபரப்பு செய்திட ஏற்பாடுகள் செய்யலாம்.

பாம்புகளின் நண்பன் உசேன்

தற்போது தென்காசியில் ஷேக் உசேன் என்று 26 வயது இளைஞர் தன் ஊரிலும், அருகாமை கிராமங்களிலும் இதுவரை 5000 பாம்புகளுக்கு மேல் தானே லாவகமாக பிடித்து அதை காட்டில் உயிர் வாழ வைத்துள்ளார்.

விலங்கியல் பட்டம் பெற்ற இவர் இப்படி பயமின்றி தன்னலம் பாராமல் சமுதாய நலனுக்காக செய்து வரும் சேவையை பாராட்டி முதலமைச்சர் ஸ்டாலின் உசைனுக்கு விசேஷ பாராட்டும், கவுரவமும் தரவேண்டும்.

அந்த இளைஞரது பாராட்டுக்குரிய சேவையின் பயனாக சமுதாயம் பெற்றுள்ள நலனை நாடே புரிந்து கொள்ள இது உதவும், அதையே உலக பாம்பு தின அறிவிப்பாக எதிர்பார்க்கிறோம்.

சென்னை பாம்பு பண்ணையை பற்றி மேலும் தெறிந்துக்கொள்ள இந்த காணொலியை காணவும் https://youtu.be/uvfi5m73p0w

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *