செய்திகள்

பாம்பன் ரெயில் பாலத்தில் மறுஅறிவிப்பு வரும் வரை போக்குவரத்து ரத்து

ராமேஸ்வரம்,டிச.6–

பாம்பன் ரெயில் தூக்கு பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மறு அறிவிப்பு வரும் வரை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் – ராமேஸ்வரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் உள்ள பாம்பன் ரெயில் தூக்குப் பாலம் விசைப்படகுகள் வந்து செல்வதற்கு திறக்கப்பட்டது. இதன்பின் மூடும் போது இணைக்கும் பகுதி சரியாக சேராமல் சேதமடைந்து விலகியது. இதனால் ராமேஸ்வரத்துக்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து திருச்சி, மதுரை ரெயில்கள், மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டன. இதன்பின் ரெயில் பாலங்களை சீரமைக்கும் பொறியாளர் மற்றும் 100–க்கு மேற்படி ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தெற்கு ரெயில்வே பாலங்கள் முதன்மை பொறியாளர் ரவீந்திரபாபு, கோட்டப் பொறியாளர் பாஸ்கரன், கூடுதல் மதுரை கோட்ட மேலாளர் லலீத்குமார் மஞ்சுகனி மற்றும் பொறியாளர்கள் பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று பல மணி நேரம் ஆய்வு நடத்தினர். மேலும் பாலத்தின் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டன. ஆனாலும் பயணிகள் பாதுகாப்பு கருதி மண்டபம் – ராமேஸ்வரம் ரெயில் சேவை மட்டும் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ராமேஸ்வரம் பாம்பன் ரெயில் பாலத்தின் ஒரு பகுதியில் கூடுதல் பாதுகாப்புக்காக பராமரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். ராமேவரத்தில் இருந்து மண்டபம் ரெயில் நிலையத்துக்கும் இங்கிருந்து ராமேஸ்வரத்துக்கும் பயணிகளை அனுப்பி வைக்க ரெயில்வே நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *