சென்னை, பிப்.4–
ரெயில்வே திட்டங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மத்திய அரசின் 2025–-26–ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்கள் மற்றும் கோவா ஆகிய ரெயில்வே துறைக்கு மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் திட்டங்கள் குறித்தும் அஸ்வினி வைஷ்ணவ் புதுடெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
2025-–26–ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரெயில்வே மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ரூ.264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட (ரூ.879 கோடி) 7.5 சதவீதம் அதிகமாகும்.
தமிழ்நாட்டில் 2014-–ம் ஆண்டுமுதல் தற்போது வரை 1,303 கி.மீ தொலைவுக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் முழு ரெயில்வே கட்டமைப்புக்கு சமமானதாகும். அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.2,948 கோடி மதிப்பீட்டில் 77 ரெயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. மொத்தமாக 2,587 கி.மீ நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
தற்போதைய பட்ஜெட்டில் ரெயில்வே பாதுகாப்புக்கென ரூ.1.16 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரெயில்வேயின் சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், தண்டவாளம் மேம்பாடு உள்ளிட்டவை மேம்படுத்தப்படும். மேலும், 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தண்டவாளங்கள் மாற்றியமைக்கப்படும்.
பாம்பன் பாலம் விரைவில் திறப்பு
பாம்பன் ரெயில்வே பாலம் ஒரு தனித்துவமானது. பாம்பன் பாலத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. அனைத்துவிதமான ஒப்புதல் சான்றிதழ்களும் பெறப்பட்டுவிட்டன. புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பாலம் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தனுஷ்கோடி ரெயில்வே திட்டம் மத்திய அரசு தரப்பில் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனால், மாநில அரசு தரப்பில் அதனை செயல்படுத்த விருப்பப்படவில்லை.
கர்நாடக மாநிலத்திற்கு ரூ.7,564 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 97% ரயில் வழித்தடங்கள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது. விரைவில் முழுவதும் மின்மயமாக்கப்படும். கேரளா மாநிலத்தில் ரூ. 3,042 கோடி ரெயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வந்த பின் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளம் என அனைத்து மாநிலங்களுக்கும் ஆண்டுதோறும் புதிய ரெயில்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படும். 14 ஆயிரம் புதிய ஏசி அல்லாத பெட்டிகள் தயாரிக்கப்படும். அனைத்து மாநிலங்களும் புதிய ரெயில்கள் வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. புதிய ரெயில்களை இயக்க கூடுதல் தண்டவாளங்களும், அதைக் கட்டமைக்க கூடுதல் நிலங்களும் தேவைப்படுகின்றன.
நிலங்களை வழங்க கோரிக்கை
இதற்கான நிலங்களை வழங்க மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 50 நமோ பாரத் புதிய ரெயில்கள் இயக்க இந்த பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய ரெயில்கள் மற்றும் கூடுதல் பெட்டிகள் தெற்கு ரெயில்வேயில் இணைக்கப்பட உள்ளது. ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக ரெயில்வே திட்டங்கள் குறித்து தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.விஸ்வநாத் ஈரயா செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறினார். பேட்டியின் போது தெற்கு ரெயில்வே முதன்மை அதிகாரிகள் சோமேஸ் குமார், பேஜி சார்ஜ், பி.மகேஷ், நிர்வாக அதிகாரிகள் சுசில்குமார் மவுரியா, ஸ்ரீ கணேஷ், பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீ ராம் சங்கர், முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.