ராமேஸ்வரம், டிச. 23–
பாம்பன் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதையடுத்து ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான ரெயில் பாலமாக உள்ள, பாம்பன் ரெயிலின் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த நவீன கருவி திடீரென பழுதானதால் ரெயில்களை இயக்க சிக்னல்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து சென்னை, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரக்கூடிய ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்படுகின்றன.
பயணிகள் தவிப்பு
இந்த தொழில்நுட்ப கோளாறால் ராமேசுவரம்-மதுரை ரெயில் நேற்று ரத்து செய்யப்பட்டது. மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட ரெயில், மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. ராமேசுவரம்-கன்னியாகுமரி ரெயில் மண்டபம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சென்னையில் இருந்து நேற்று இரவு ராமேசுவரத்திற்கு வந்த ரெயில் இன்று அதிகாலை 4 மணிக்கு மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் பஸ், ஷேர் ஆட்டோக்கள் மூலம் ராமேசுவரம் சென்றனர்.
பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு, மதுரையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இன்று காலை பாம்பன் வந்து அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில்கள் கடக்கும்போது பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய முடியாதபட்சத்தில் சென்னை, பெங்களூருவில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்படுவார்கள் என தெரிகிறது.