சிறுகதை

பாமர ஆராய்ச்சி | ராஜா செல்லமுத்து

Spread the love

“இருப்பதை விட்டுவிட்டு, இல்லாததை தேடுவது, அவசியமற்றது”

காலிக் குடங்களுடன் தண்ணீருக்காக நின்றிருந்தனர், கிராம மக்கள். பூமியில் சுரக்காத தண்ணீர், வெயிலில் நின்றிருந்த மக்களின் உடம்பிலிருந்து வெளியேறியது. “ச்சூ… அம்மா… யப்பா” என்று மூச்சு விட்ட படியே நின்றிருந்தவர்களின் உடல் வெப்பம்,

சுற்றியிருப்பவர்களுக்கு சூடு ஏறியது.

“தண்ணீர் வருமா?’’

“வருதுன்னு சொல்றாங்க”

“காலையில இருந்து நின்னுட்டுத் தான் இருக்கோம்; வந்த பாடில்லையே; நாம எல்லாம் சேர்ந்து இந்த பூமியில தோண்டியிருந்தால் கூட தண்ணி வந்திருக்கும் போல, வெட்டிப் பயக நாமள ஏமாத்துறதே இவனுகளுக்கு வேலையா போச்சு. ஓட்டு வாங்கிட்டு போனவன் தான், அதோட சரி, இதுவரைக்கும் என்ன ஏதுன்னு கூட எவனும் வந்து கேக்கல என்று ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருக்கும் போது,

“தாத்தா, தண்ணீர் தவிக்குது” என்று ஒரு குழந்தை கேட்டபோது,

“இந்தா இப்ப தண்ணி வந்திரும், “இல்ல தாத்தா, நேத்து இருந்து இதையே தான், அம்மா சொல்லிவிட்டு இருக்கு. காலையில இருந்து இங்கனயே தான், இருக்கோம். தண்ணி வருது, தண்ணி வருதுன்னு தான் சொல்கிறார்களேயொழிய தண்ணி வண்டி வரக்காணாமே தாத்தா, என்று நாவறண்டு பேசியவனை தன் மார்போடு அணைத்து கொண்டவர். நெடுந்தூரம் பார்த்தார்.

கதகதவென்று கானல் நீர் பந்தல் போட்டிருந்தது.

வாரேன்னு தான் சொன்னாங்கப்ப இன்னும் காணோமே சொல்லும்போதே, கிழவனின் தொண்டைக்குழிக்குள் ஈரம் வற்றியிருந்தது. காலிக்குடங்களில் வெப்பக்காற்று, “விர் விர்” ரென உள்ளே போய் வெளியே வரும்போது, தாகத்தோடு வெளியே வந்தது.

“அன்னம்மா” வேலைக்கு போகலையா?

“இல்லப்பா தண்ணி இல்லாம என்ன பண்ண முடியும். தண்ணி எதிர்பார்த்தே எல்லாம் போயிடுச்சு. ஒரு அடிப்படைத் தேவைகளைக்கூட செஞ்சு தராத ஆளுக, மக்களுக்கு வேற என்ன பண்ணப் போறாங்க தொண்டைத் தண்ணி வத்திப் போகத் தான் தினமும் சொல்றோம்.

எவனாவது கேட்டானுகளா ? எப்படி இருந்த நம்ம ஊரு, இப்படி வெந்து வெடிச்சுப் போயிகெடக்குது. மாட்டோட குளம்படியில தண்ணீ ஊத்து கொப்பளிச்சி இடம், இப்போ மூவாயிரம் அதே தோன்றினா கூட ஒரு பொட்டு தண்ணி வர மாட்டேங்குது எல்லாம் அக்கிரமம், அநியாயம் வெளைஞ்சு கிடக்கு. சுயநலம் மேலோங்கி நிக்குது. அதனால தான், இந்த பூமி, இப்போ இவ்வளவு வறட்சியாக இருக்கு” என்று பேசிக்கொண்டிருக்கும் போது, “தம்பி இங்க இவ்வளவு பேசிட்டு இருக்கீங்களே, எல்லாரும் ஒன்னும் மறந்திட்டு இருக்கீங்க தட்டிக் கேக்கனும் தம்பி, தப்பு செய்யுற ஆளுகள அறிவு தெரியாம இருக்கிற ஆளுகளுக்கு புத்தி புகட்டுணும் தம்பி என்று தலையில் உருமா கட்டியிருந்த ஒரு பெரியவர், மீசையை முறுக்கிவிட்டபடியே பேசினார். அவர் பேசுவதை எல்லாம் ஆவலோடு கேட்டனர்.

“தாத்தா புரியலையே”

“என்ன தம்பி, இவ்வளவு தெளிவில்லாமப் பேசுறீங்க? நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?

“ஜியாலஜி தாத்தா”

“அப்படின்னா என்ன? என்று பெரியவர் கேட்க,

“ஜியாலஜின்னா மண்ணியல் தாத்தா” என்று படித்தவன் சொன்னது, கூட அதுவும் எதுவும் தெரியாமல் விழித்தார், பெரியவர்.

“மண்ணியல்ங்கிறது, மண்ணப்பத்திப் படிக்கிறது தாத்தா” என்றவனிடம்,

“ஓ, மண்ணியலா?

“தம்பி, நான் ஒன்னு கேக்குறேன் தண்ணி இருக்கிற எடத்தை விட்டுவிட்டு, இருக்காங்க மனுசங்க இருக்கிற பூமியில, இருக்கிற தண்ணீரை எப்பிடி பாதுகாக்கணும்னு தெரியலையே அத விட்டு, மனுசங்களே இல்லாத இடத்தில போயி தேடிட்டு இருக்காங்க ஆராய்ச்சியாளல்கள் கிட்ட போய் இத சொல்லுங்க.

கொஞ்சமாவது அவங்களுக்கு அறிவு இருக்கான்னு தெரிஞ்சுக்கிருவமே என்று அந்த உருமா பெரியவர் சொன்ன போது பெரியவர் சொல்றது உண்மை தான என்று அங்கிருந்தவர்களுக்கு, தண்ணீரை விட வெட்டி ஆராய்ச்சியாளர்கள் மீது ஆத்திரம் பொங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *