செய்திகள்

‘‘பானி புயல்’’ எச்சரிக்கை எதிரொலி: விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

விழுப்புரம், ஏப்.26-

‘‘பானி புயல்’’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள் கிராமங்களில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:–

பானி புயல் மற்றும் பெரு மழை முன்னறிவிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாகவும் முழு அக்கறையுடனும் மேற்கொள்ளவேண்டும். சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அனைத்து வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் தங்களின் பணியாளர்கள் முழுமையாக ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் தங்கள் வட்டாரத்திற்கு தேவையான ஜெனரேட்டர்களை ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஊராட்சி செயலர்கள் தங்கள் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தேவையான அளவு தண்ணீர் இருப்பில் வைத்திருக்க மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

புயலின் போது சாலைகளில் விழும் மரங்களை அகற்றுவதற்கு போதுமான அளவு மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை தேவையான அளவு பெட்ரோலுடன் தயார் நிலையில் வைத்திருப்பதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள பெட்ரோல் பங்குகளில் அவசர காலத்தில் பயன்படுத்திட தேவையான அளவு எரிபொருள் இருப்பில் வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி பணியாளர்களும் நாளை முதல் புயல் கடந்து நிவாரணப்பணிகள் முடியும் வரை கிராமத்திலேயே தங்கியிருந்து முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பானி புயல் பொருட்டு வருவாய் கோட்ட அலுவலர்கள் இன்றைய தேதிக்குள்ளாகவோ கோட்ட அளவிலான மற்றும் வட்ட அளவிளான அனைத்து துறை ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தி துறை சார்ந்த பணிகளை முடுக்கிவிட்டு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

பானி புயலால் பாதிப்புக்குள்ளாக நேர்ந்தால், மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்தும் விதத்திற்கு உதவிகரமாக பைபர் படகுகள், நாட்டு படகுகள், தொலை தொடர்புக்கு ஒலிபெருக்கிகள், மெகா போன், சுகாதாரத் துறையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள், 108 ஆம்புலன்ஸ், தனியார் ஆம்புலன்ஸ், பைக் ஆம்புலன்ஸ், அதிக திறன் வாய்ந்த நீர் ஏற்றும் மோட்டர் இயந்திரம், வெள்ள நீர் உறுஞ்சும் எந்திரம், போதுமான அளவு மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், டார்ச் லைட்டுகள், அனைத்து ஊராட்சிகளிலும் போதுமான ஜெனரேட்டர்கள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மின்துறையினர் தேவையான மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை அலுவலர்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் கரைகளின் ஸ்திரதன்மையை உறுதிப் படுத்திட வேண்டும், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானூர் மற்றும் மரக்காணம் வட்டங்களில் உள்ள 19 மீனவக் குடியிருப்பு பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி 5 மீனவ கிராமங்களுக்கு ஒரு துணை கலெக்டர் நிலையில் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்தும் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் கால்நடைகளை பாதுகாக்க மாவட்ட முழுமைக்கும் 148 கால்நடை பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம அளவில் கால்நடைகளை பாதுகாக்க 1,260 முதல்நிலை பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், இவர்கள் தேவையான நேரத்தில் கால்நடைகளை பாதுகாப்பு மையத்தில் கொண்டு சேர்க்க மற்றும் மாவட்ட முழுவதும் பாம்பு பிடி நபர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கலெக்டர் பேசியதாவது:–

மேலும், கலெக்டர் அலுவலகத்தில் புயல் மழை தொடர்பாக பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். தொலை தொடர்புக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04146–223265, குடிநீர் தொடர்பான புகார்களுக்கு 18004253566 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன், சப் கலெக்டர்கள் திருக்கோவிலூர் சாருஸ்ரீ, திண்டிவனம் மெர்சிரம்யா, கள்ளக்குறிச்சி ஸ்ரீகாந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல, சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி சப் கலெக் டர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் எஸ்.இந்திரா , வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன், தனி வட்டாட்சியர்கள் ராஜராஜன், துணை வட்டாட்சியர்கள் கமலக்கண்ணன், குணசேகரன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினர், மின் வாரிய அலுவலர்கள், மருத்துவத் துறையினர், பொதுப்பணித் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *