நாயகியின் குடும்பம் முருக கடவுளின் அடிமை கூட அல்ல, இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் கொத்தடிமை குடும்பம் என்று சொல்லலாம்… அந்த அளவுக்கு முரட்டுத்தனமான மூர்க்கமான ஒரு பக்தி…
நாயகி தன் தாயின் வயிற்றில் கருவாக இருந்த பொழுதே அவர்களது தாய் காரைக்குடியில் இருந்து பழனிக்கு ஏறக்குறைய 200 கி.மீ. பாதயாத்திரை சென்றவர்…
அதே போல் நாயகி திருமணமான பின் அவரும் கருவுற்ற சமயத்தில் விடாமல் பாத யாத்திரை சென்றவர்…
தலைமுறை தலைமுறையாய் தொடர்கிறது அவர்களது பாதயாத்திரை…
தாயின் கருவறையில் இருக்கும் போதே நாயகிக்கு பாத யாத்திரை அத்துபடி…
(இந்த பாதயாத்திரை ஆறு நாட்கள் நடக்க வேண்டும்… அதிகாலை 3 மணிக்கு ஆரம்பித்து காலை 9 மணிக்கு ஓய்வு… மீண்டும் மதியம் 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 11… 12 மணி அளவில் மீண்டும் ஓய்வு… இப்படி 6 நாட்கள் தொடர்ந்து பழனிமலை முருகனை தரிசிப்பார்கள்…)
பிறந்தது முதல் அம்மாவின் கையில் அப்பாவின் தோளில் என்று பாத யாத்திரை திருமணம் ஆகும் வரை ஒரு வருடம் கூட விடாது பாத யாத்திரை பயணம் தொடர்ந்திருக்கிறது…
அவர்கள் வீட்டில் விஷேசம் என்றால் சஷ்டி மற்றும் கிருத்திகை நாளாய் பார்த்துக் கொள்வார்கள்… இந்த நாட்களில் தவறாது விரதமும் இருப்பார்கள்.
நாயகியை பார்க்க வந்த மாப்பிள்ளை குடும்பமும் முருகனை அதிகம் வணங்குவதாக இருக்கவே முருகன் அருளால்தான் தனது திருமணம் இனிதே நடைபெற்றதாக நினைக்கிறது நாயகியின் மனம்…
திருமணத்தின் போது நாங்களும் முருக பக்தர்கள் என்று சொன்னது ஒப்புக்கு ஒரு பேச்சுக்கு என்று போக போகத்தான் புரிகிறது….
முருகன் அருளால் பல நல்ல விசயங்கள் நடந்ததும்… பல கெட்ட விசயங்கள் தள்ளிப் போனதுமான பல அனுபவங்களை நாயகி சொல்லி கணவன் இந்த காதில் கேட்டு அந்த காதில் விட்ட பல கதைகள் ஏராளம் உண்டு…
சஷ்டி… கிருத்திகை… நாட்களில் மாமியார் அசைவம் சமைப்பது என்று தொடங்கி கணவன் அந்நாட்களில் வலிய மையல் கொள்வது உட்பட சகலமும் அரங்கேறி விரதத்தை “முடித்து” வைப்பார்கள்…
மாமியாரையும் கணவரையும் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலை…
சஷ்டி… கிருத்திகை… என்று இந்த ஒரு நாளுக்கே இப்படி என்றால் பாதயாத்திரை செல்ல ஆறு நாட்கள் ஆகும் என்றால் இது நடக்கற காரியமா…
மாமியார் மற்றும் கணவருக்கு உடல்நிலை சரியில்லை… உறவுகளின் வருகை என்று எதையாவதை ஏற்படுத்தி பாதயாத்திரையையும் நடக்க விடாது பண்ணி விடுவார்கள்…
இதற்கிடையில் இரு பெண் குழந்தைகள் பிறந்து, கார்த்திகா கிருத்திகா என்ற பெயர்களை கூட வைக்க மறுத்து ஏதோ ஒரு காரணம் காட்டி ஏதோ ஒரு பெயரை வைத்து விடுகிறார்கள்…
குடும்பத்தில் கணவன் கொடிக்கம்பமாய் நிற்க… அதில் மாமியார் கொடி பட்டொளி வீசி பறக்கிறது… கணவன் மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த கூட்டணிக்கு எப்போதுமே அமோகமான வெற்றி முகம்தான்…
சுயமாய் நிற்க முடியாத நாயகி சுயேச்சை வேட்பாளராக ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறார்…
நாயகி கணவனுக்கும் மாமியாருக்கும் செய்கிற எந்த ஒரு வேலையிலும் எந்த ஒரு வேளையும் குறை வைக்கவில்லை….
கணவனும் மாமியாரும் நாயகியிடம் மற்ற விஷயங்களில் ஓரளவு நடந்து கொண்டாலும் ஆரம்பம் முதலே கடைசி வரைக்கும் முருகன் பக்தி விரதம் ஆகிய விசயங்களில் மருமகளுக்கு கொஞ்சமும் கருணை காட்டுவதில்லை…
ஒரு நாள் ரெண்டு நாள் என்றால் பரவாயில்லை பாத யாத்திரை என்பது ஒரு வாரமே ஆகி விடுவதால் கருணை என்ற பேச்சுக்கே இடமில்லை….
ஒரு முறை நாயகி தோழி ஒருத்தியிடம் பேசும் போது குடும்பத்தில் தான் நிம்மதியாய் இல்லை என்றும்… அவர்களிடம் மகிழ்ச்சியாய் இருப்பதாய் காட்டிக் கொள்வதாயும்… எப்போதுமே மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாயும்… இதற்கெல்லாம் ஒரே மருந்து முருகனை மனதில் நினைப்பது ஒன்றால் மட்டுமே… ‘யாமிருக்க பயமேன்’ என்ற அந்த ஒற்றை மந்திரம்தான் தன்னை உயிர் வாழ வைப்பதாக சொல்வதை கணவன் கேட்டு சற்றே அதிர்ச்சி அடைகிறான்..
அடுத்தடுத்து மாமியாரின் உடல்நிலை சற்றே கவலைக்கிடமாக ஆகையில் கணவன் அம்மாவுக்காக வேண்டிக் கொண்டவன் மாமியாருக்காக மனைவி எதாவது வேண்டிக் கொள்வாள் என்று பார்த்தால் கோவிலுக்கு சென்று திருநீர் கூட தன் அன்னையின் நெற்றியில் வைக்காத மனைவியிடம் எதையும் சொல்ல முடியாமல் தவிக்கிறான்…
மாமியார் ஒரு வழியாக இறைவனடி சேர ஒரு வருடம் கழித்து மனைவியிடம் நீ வேண்டுமானால் பாத யாத்திரை போய் வா என்று அனுமதி கொடுக்க நாயகி மறுத்து விடுகிறாள்…
கோபம் மனைவிக்கு தணியவில்லை என்பதை மட்டும் அறிந்து கொள்கிறான்… மறாவது, வருடம் மனைவியிடம் திரும்பவும் பாத யாத்திரை போக சொல்ல அப்போதும் மறுத்து விடுகிறாள்…
அவளை சமாதானம் செய்யும் பொருட்டு அந்த 200 கிமீ பாத யாத்திரையை கணவனே நடக்க முடிவு செய்து நடந்தும் போகிறான்….
ஆனாலும் நாயகியின் மனம் என்னவோ கொஞ்சமும் மனம் இறங்கவில்லை…அந்த பழனி முருகன் கோபித்துக் கொண்டு போய் நின்ற பின் பெற்றோர் அழைத்தும் உடன் செல்ல மறுத்த கடவுளின் பக்தை அல்லவா இந்த நாயகி…
அவள் யார் சொல்லிப்போவாள்?