தியாகராய நகர் டிப்போவில் ஓடிக்களைத்த வாகனங்கள் கொஞ்சம் ஓய்வில் இருந்தன.
அது மதிய நேரம் என்பதால் தார் சாலையும் பேருந்தின் கூரையும் ரொம்பவே வெப்பமாக இருந்தது. அந்த வெப்ப வேளையில் கூட அமர்வதற்கு இருக்கை கிடைக்காது என்று கருதிய சில பயணிகள் சூடுபட்டாலும் பரவாயில்லை என்று முன்னிருக்கையில் அமர்ந்திருந்தனர் .
அப்போது குமரவேலும் விஷ்ணுவும் பேருந்தில் ஏறி அவர்களுக்கான இடத்தை பிடித்தார்கள்.
டேய் ரொம்ப சூடா இருக்கு இறங்கிட்டு அப்புறம் ஏறலாமா? என்று கேட்டான் விஷ்ணு.
கொஞ்சம் சூட்ட பொறுத்துக்க . அப்புறம் வந்தா நமக்கு பஸ்ல இடம் கிடைக்காது என்று குமரவேல் விஷ்ணுவிற்கு சொன்னான். வெயில் படும் இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
குமரவேல் சொன்னது போலவே சிறிது நேரத்திற்கெல்லாம் பேருந்தில் இருந்த மொத்த இருக்கையும் நிரம்பி வழிந்தது.
அப்போது ஒரு திருநங்கை கைதட்டிக் கொண்டு எல்லோரின் தலையிலும் கை வைத்து காசு கொடுங்க என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஏதோ கொடுத்து வைத்தவள் போல அந்தத் திருநங்கை எல்லோரிடமும் சட்டமாகவும் கொடுத்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலும் யாசகம் கேட்டுக் கொண்டாள். பணம் தராவிட்டால் இடத்தை விட்டு நகர மாட்டாள் போல இந்தத் திருநங்கை என்ற எண்ணத்தில் சிலர் பணத்தை போட்டுத் துரத்தி விட்டனர்.
சிலர் சில்லறை இல்லை என்று அனுப்பி வைத்தனர். அப்போது குமரவேல் விஷ்ணு அமர்ந்திருக்கும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த திருநங்கை காசு கொடு என்று கேட்க தாராள மனதுள்ள விஷ்ணு இருபது ரூபாய் எடுத்து அந்தத் திருநங்கையின் கையில் திணித்தான்.
நீங்க நல்லா இருப்பீங்க என்று இருவரின் தலையிலும் கை வைத்து ஆசீர்வாதம் செய்த திருநங்கை இருவரின் எதிர் திசையில் இருந்த ஒரு பெண்ணிடம் கேட்க அந்தப் பெண் இல்லை என்பதை சைகையில் சொல்லி அந்தத் திருநங்கை விரட்டினாள்.
இதற்கு மேல் இந்த பெண்ணிடம் கேட்டால் நமக்கு அவமானம் என்று நினைத்த அந்தத் திருநங்கை அந்த பெண்ணை முறைத்து பார்த்துவிட்டு அடுத்த பயணியிடம் சென்றாள்.
அந்தப் பெண் செய்த செய்கையை பார்த்துக் கொண்டிருந்த குமரவேலு விஷ்ணுவும் அஞ்சு ரூபா கொடுத்தா இந்த பொண்ணு குறைந்து போயிருமா என்ன? இவ்ளோ அலட்சியமா அந்தத் திருநங்கை தட்டிக் கழிக்குது. இந்த பொண்ணுக்கு எல்லாம் நெஞ்சில ஈரம் இல்லை என்று இருவரும் அந்த பெண்ணைப் பற்றி பேசிக் கொண்டு வந்தார்கள்.
சில நொடிகளில் அந்த பேருந்து புறப்பட தயாரானது. அப்பொழுதும் அந்தப் பெண்ணைப் பற்றி பேசிக் கொண்டும் அந்தப் பெண்ணை பார்த்துக் கொண்டும் வந்து கொண்டிருந்தார்கள்.
விஷ்ணுவும் குமரவேலும் பேருந்து ஒரு சிக்னல் நின்றபோது, அந்தச் சிக்னலில் இரண்டு வயது முதிர்ந்த தம்பதிகள் யாசகம் கேட்டுக் கொண்டு வந்தார்கள்.
ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த அந்தப் பெண் சட்டென்று தன் கைப்பையில் இருந்த பர்சை எடுத்து அதிலிருந்து 50 ரூபாய் தாளை எடுத்து அந்த முதியோரின் கையில் கொடுத்தாள்.
இது கொஞ்சம் கூட எதிர்பார்க்காத குமரவேலும் விஷ்ணுவும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
உண்மைதான் அந்தப் பெண் பண்ணுன செயல் உண்மைதான். திருநங்கை அப்படிங்கிற பேர்ல திடகாத்திரமாக இருக்கிற ஒருத்தவங்களுக்கு நாம யாசகம் கொடுத்தோம். இதையே பிழைப்பா வச்சுக்கிட்டு அவங்க எந்த வேலை வெட்டிக்கும் போகாம இப்படி வாழ்ந்துட்டு இருக்காங்க . ஆனா உண்மையிலேயே நடக்க முடியாத வயதான தம்பதிகளுக்கு அந்தப் பெண் கொடுத்தது தான் உண்மையான யாசகம். நாம கொடுத்தது தப்பு. அதுக்குத்தான் பாத்திரம் அறிந்து பிச்சை இடுன்னு சொல்லி இருக்காங்க என்று வருந்தினர் குமரவேலும் விஷ்ணுவும் .
அதுவரையில் அந்த பெண்ணைப் பற்றி இருவரும் தவறுதலாக நினைத்திருந்தார்கள்.
பேருந்து சிக்னலை விட்டு புறப்பட்டது.
ஆனால் இரண்டு பேரும் அந்தப் பெண்ணைப் பற்றிய தவறுதலான எண்ணங்கள் இன்றி, அந்தப் பெண்ணை இப்போது இருவரும் ஆறுதலாக பார்த்தார்கள்.
அந்தப் பெண் இதைப் பற்றிக் கவலைப்படாமல் விரையும் சாலையைப் பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தாள்.