நாடும் நடப்பும்

பாதுகாப்பு வளையத்தில் ஆடுகளம்: இதர துறைகளுக்கு நல்ல முன் உதாரணம்

உலகமே கொரோனா பிடியில் சிக்கி தடுமாறிக் கொண்டிருக்கையில் ஐபிஎல் ஆட்டங்கள் பாதியில் திடீரென்று நிறுத்தப்பட்டது அல்லவா? அதை மீண்டும் நடத்த ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பித்து விட்டது.

இப்படி ரசிகர்கள் யாரும் பார்க்க வரமுடியாத கெடுபிடிகளுக்கு இடையே கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து போன்ற பரபரப்பு ஆட்டங்கள் தேவையா? என பலர் முணுமுணுத்தாலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகள், வயதானவர்கள், இளம் ரசிகர்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் அலுவலர்கள் போன்ற பலருக்கு மாலை நேர மணமகிழ் சமாச்சாரம் இப்படிப்பட்ட அதிரடி விளையாட்டுகள் என்பதை உணர்ந்தாக வேண்டும்.

ஐபிஎல் ஆட்டங்கள் தடை பெற்றால் விளம்பர நிறுவனங்கள் நஷ்ட ஈடாக ரூ.2000 கோடி வரை கோருவார்கள். அதனால் தான் கிரிக்கெட் வாரியம் எப்படியாவது இத்தொடரை நடத்தி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பது உண்மை தான்.

விளம்பர துறையில் உள்ளவர்கள் பல்வேறு புதுப்புது உத்திகளை கையாண்டு மிக நூதனமான முறைகளில் விளம்பரங்களை உருவாக்கி, அதை பல கோடிகள் செலவு செய்து விளம்பரப்படுத்த துவங்கிய நேரத்தில் இப்படி தடை பெற்றால் அத்துறையால் தாக்கு பிடிக்க முடியாது. அதில் உள்ளவர்கள் யாரும் தினக் கூலி சாமானியன் போல் கையில் பணமின்றி தவிப்பவர்கள் கிடையாது.

ஆனால் அவரக்ளின் பெரும் செலவுகள் செய்யப்பட்டாக வேண்டுமே! அப்படி செய்து பெறப்பட்ட புதுமையான விளம்பர யுத்திகள் மீண்டும் தொடர வாய்ப்பை ஏற்படுத்தினால் அது மறைமுகமாக நமது தேசிய பொருளாதாரத்திற்கும் வலு சேர்க்கும்.

ஆகவே விரைவில் நடைபெற இருக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ், இங்கிலாந்தில் இந்திய அணியின் சுற்றுப் பயணம், ஒலிம்பிக்ஸ் போட்டிகள் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இன்றைய இருக்கமான சூழ்நிலையில் மணமதை இலகுவாக்கும் அருமருந்தாகவே இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 18 அல்லது 19ந் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. எஞ்சியுள்ள 31 ஆட்டங்களை நடத்த 3 வார காலம் போதுமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஐபிஎல் டி 20 தொடர் கடந்த ஏப்ரல் 9ந் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் மே 4 ந் தேதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தொடரின் எஞ்சிய 31 ஆட்டங்களையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது பிசிசிஐ. இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி கூறுகையில், ‘தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் செப்டம்பர் 18 முதல் 20 ந் தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கப்படலாம். இதேபோன்று அக்டோபர் 9 அல்லது 10 ந் தேதி இறுதிப் போட்டி நடத்தப்படக் கூடும்.

இந்திய கிரிக்கெட் அணி வரும் 2ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. அங்கு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடனும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி கலந்து கொள்கிறது.

இதில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் செப்டம்பர் 14ந் தேதி மான்செஸ்டர் நகரில் முடிவடைகிறது. இதன் பின்னர் அடுத்த நாளே ஒட்டுமொத்த இந்திய அணியும் தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்படி பாதுகாப்பாக கொரோனா தொற்றிலிருந்து தற்காப்புடன் பயணம் செய்யும் விளையாட்டு வீரர்கள், இந்தப் போட்டிகளின் பிரதிநிதிகள், பல்வேறு கடமைகள் செய்ய தேவையான பணியாளர்களை கொண்டுச் செல்லும் பணி மிக துல்லியமாக செயல்படுத்தப்பட்டு வருவதை அறிவோம்.

இப்படிப்பட்ட பாதுகாப்பு வளையங்கள் வரும் காலத்தில் கல்வித்துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. கிட்டத்தட்ட 16 மாதங்களாக கல்வி வளாகங்களில் மாணவர் கால் தடம் படாமல் இருப்பது மாறியாக வேண்டுமென மனம் வேண்டுகிறது.

ஆனால் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும்போதெல்லாம் இன்றைய இளம் தலைமுறை பாதிப்பிலிருந்து தப்பித்தால் போதும் என்று இருப்பதும் அவசியம் என்று செயல்பட்டு கொண்டிருப்பது சரிதானா? என்றும் கேட்கும் போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம்.

ஆகவே இப்படி ஒரு துறை பாதுகாப்பாக செயல்படுவது எப்படி? என்று செயல்படுவதும் நல்ல அனுபவம் தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *