செய்திகள்

பாதுகாப்பு துறைக்கு 101 வகை ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு ‘திடீர்’ தடை

பாதுகாப்பு துறைக்கு 101 வகை ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு ‘திடீர்’ தடை

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தகவல்

புதுடெல்லி, ஆக.9

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சுயசார்பு திட்டத்தின்கீழ், பாது காப்புத்துறைக்கான 101 வகையான ராணுவத் தள வாடங்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்புத்துறைக்கான பெரும்பாலான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு சுயசார்பு-இந்தியா திட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதனடிப்படையில் வெளிநாட்டில் இறக்குமதி செய்யும் 101 வகை ராணுவ பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘‘பொருளாதாரம், உள்கட்டமைப்பு, திட்டத்தை செயல்படுத்துதல், மக்கள்தொகை மற்றும் தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது.

அதன்படி, பாதுகாப்புத்துறையில் பயன்படுத்தப்படும் 101 வகை பொருள்களின் பட்டியலைத் தயாரித்து அதனை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் தன்னம்பிக்கைக்கு இது ஒரு பெரிய படியாகும். தடைசெய்யப்பட்ட 101 வகை பொருள்களின் பட்டியலில் பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானம், எல்.சி.எச். ரேடார்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

மேலும், இந்த தடையை 2024 ம் ஆண்டு-க்குள் முழுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 52,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்படும்’’.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில்,

இந்த நடவடிக்கையானது, இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை, சொந்த வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி திறன்கள் மூலம் அல்லது, ஆயுதப்படைகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உருவாக்கியுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தயாரிப்பதற்காக, இந்திய பாதுகாப்பு துறையினருக்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாகும். பாதுகாப்பு உபகரணம், தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து தரும் அமைப்புக்கு புது வாய்ப்பை ஏற்படுத்தி தர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளை, இந்திய தொழில்துறை தயாரிக்க, தற்போதைய மற்றும் எதிர்கால திறன்களை கருத்தில் கொண்டு, ஆயுதப்படைகள், பொது மற்றும் தனியார் துறையினருடன் ஆலோசனை நடத்தி, இறக்குமதிக்கு தடை செய்ய வேண்டிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

ரூ.3½ கோடியில் 260 திட்டங்கள்

கடந்த 2015 முதல் நடப்பு ஆண்டு 2020 ஆகஸ்ட் வரை 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 260 திட்டங்களுக்கு முப்படைகள் ஒப்பந்தம் போட்டுள்ளன. தற்போது, அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கும் போது 4 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்களை பெற முடியும். அதில், 1,30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், ராணுவம் மற்றும் விமானப்படைக்கு மதிப்பி டப்பட்டுள்ளது. 1,40,000 கோடி மதிப்பு பொருட்கள் கடற்படைக்காக எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை, குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியாவில் தயாரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தி, இறக்குமதி செய்ய வேண்டிய மேலும் சில ராணுவ தளவாடங்கள் எதிர்காலத்தில் கண்டறியப்படும். தடை செய்யப்பட்ட தளவாடங்கள், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படாது என்பதும் உறுதிபடுத்தப்படும் என்றும் கூறினார்.

தொழில்துறை வளர்ச்சி

முன்னதாக, நாட்டின் பாதுகாப்புத்துறையில் உள்ள ராணுவத் தளவாடங்கள் பல அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வாய்ப்பளிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் பாதுகாப்புத்துறையின் இந்த முடிவு முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

கிழக்கு லடாக் பகுதியில் எல்லையில் பதற்றத்தைத் தவிர்க்க, தவுலத்பேக் ஓல்டீ பிரிவில் சீன இந்திய மூத்த ராணுவ அதிகாரிகள் பரஸ்பர பேச்சுவார்த்தை நடந்த மறு நாளே மத்திய அரசின் இந்த முடிவை ராஜ்நாத்சிங் பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *