* ஆயுத இறக்குமதியில் முதலிடம்
* அமைதியை நிலைநாட்ட தயார் நிலையில் ராணுவம்
ஆர்.முத்துக்குமார்
உலகெங்கும் போர் பதட்டம் அதிகரித்த வண்ணம் இருப்பதை பார்க்கும்போது, ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் தேவை அதிகரிப்பு காரணமாக அவர்களுக்கு வருவாய் அதிகரிப்பு மகிழ்ச்சிகரமாகவே இருக்கும்.
ஆனால் இந்தியாவின் நிலை மிக விசித்திரமானது. தலைப்பகுதியில் பாகிஸ்தானும், வால் பகுதியில் இலங்கையும் நமது உடன்பிறப்புகளாக பல நூற்றாண்டுகளாக இருந்தும் தற்போது பிரிந்து தங்களுக்கு என புது அடையாளத்துடன் உலக நாடுகளின் வரவேற்பை பெற்றுள்ளனர்.
அவர்களுடன் எல்லை சச்சரவுகள் சமீபமாக பெரும் தலைவலியாக உயர்ந்துள்ளது, ஆனால் கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய பொருளாதார சிக்கல்களால் கட்டுண்டு இருக்கும் அந்நாடுகள் இந்தியாவுடனான வம்புகளை சற்றே அடக்கி வைத்திருக்கிறார்கள்.
அவர்களது பொருளாதார சிக்கல்கள் மட்டும் தான் அவர்கள் நாட்டில் உள்ள தீவிரவாத, மதவாதிகளை கட்டுப்படுத்தி வருகிறதா?
உண்மையில் நமது பாதுகாப்பு அம்சங்கள் உயர்திறன் கொண்டதாகவும் இருப்பதால் அவர்களது ஊடுருவல்கள், தேவையற்ற தாக்குதல்கள் உடனுக்குடன் தடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் தீய சக்திகளை நமது ராணுவ வலிமையுடன் அழிக்கப்பட்டும் வருவது தான் உண்மை!
இந்த கட்டத்தில் நமது ராணுவ தளவாடங்களின் கையிருப்பு நவீனமாகவும், போதிய அளவும் இருப்பதும் மிக அவசியமாகி உள்ளது.
இதில் நாம் தன்னிறைவுடன் இருப்பதை தான் நமது ஆயுத இறக்குமதி அதிகரிப்பு சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி, ஆய்வு நிறுவனம், ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வருடாந்திர அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:– கடந்த 2022-–ம் ஆண்டில் சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 40% ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. அந்த நாட்டில் இருந்து 16% ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் 11%, சீனா 5.2%, ஜெர்மனி 4.2%, இத்தாலி 3.8%, இங்கிலாந்து 3.2%, ஸ்பெயின் 2.6%, தென்கொரியா 2.4%, இஸ்ரேல் 2.3% என நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதுபோல அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியா மட்டும் 11% ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரஷ்யா 45 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. பிரான்ஸில் இருந்து 29%, அமெரிக்காவிடம் இருந்து 11% ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.
சர்வதேச அளவில் ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி 5.1 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி 47 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. நாட்டோ அணி நாடுகளிடம் இருந்து உக்ரைன் பெருமளவில் ஆயுதங்களை வாங்கியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாறிவரும் உலக அரசியல் சூழ்நிலையில் இந்திய பாதுகாப்புதுறை மேற்கொண்டு வரும் நல்ல நடவடிக்கைகள் நமக்கு பாதுகாப்பை தருவதுடன் உலக வர்த்தகத்திலும் நமது பங்களிப்பை உறுதி செய்து வருகிறது.