சிறுகதை

பாதியில் முடிந்த பள்ளிக்கூட காதல்! |சின்னஞ்சிறுகோபு

இது 1972-73ம் வருட காலக்கட்டத்தில் நடந்தது. அப்போது கல்கி பத்திரிகையில் இரண்டாவது தடவையாக சிவகாமியின் சபதம் தொடர்கதை ஆரம்பமாகியிருந்தது. இந்தத் தடவை ஓவியர் ‘விணு’தான் அதற்கு படங்கள் வரைய ஆரம்பித்திருந்தார்.

நான் அப்போது பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் என் உற்ற நண்பனாக இருந்தான் பிரகாசம். கொஞ்சம் விளையாட்டு புத்தி அதிகமுள்ளவன். என்மீது அவனுக்கு ஏனோ கொஞ்சம் அதிகப் பிரியம்!

நாங்கள் படித்த உயர்நிலைப்பள்ளி இருந்தது ஒரு நகரப் பஞ்சாயத்தைச் சேர்ந்த பெரிய ஊராகும். அதனால் அங்கே பஸ், ரயில், தியேட்டர்,கடைத்தெருவெல்லாம் இருந்தது.

என் நண்பன் பிரகாசத்தின் வீடும் அதே ஊரில் எங்கள் பள்ளிக்கூடம் இருந்த அதே தெருவில் இருந்தது. அது ஒரு மாடிவீடு. எனக்கோ அருகேயிருந்த கிராமம். அதனால் பள்ளிக்கூடம் விட்டப்பிறகு கூட உடனே வீட்டுக்குப் போகாமல், அவன் வீட்டில் புத்தகப் பையை போட்டுவிட்டு, அவனுடன் சுற்றிக் கொண்டிருப்பேன்!

அன்று அப்படிதான், நானும் பிரகாசமும் பள்ளிக்கூட மதிய இடைவேளையின் போது கொல்லைப் பக்கம் சென்றோம். அப்போது இரண்டு மாணவிகள் எதிரில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவிகள் என்பது மட்டும்தான் எங்களுக்குத் தெரியும்.

அவர்கள் அருகே வந்தபோது என் நண்பன் என்னைப் பிடித்து லேசாக அவர்கள் பக்கம் இடித்து தள்ளினான்!

நான் கொஞ்சம் சாய்ந்து நல்ல நிறமாக, கொஞ்சம் பூசினாற்போல் இருந்த ஒரு மாணவி மீது இடிக்கப் பார்த்தேன். நல்லவேளையாக அவள் மீது விழாமல் சமாளித்துக் கொண்டேன். அவளும் திடுக்கிட்டு கொஞ்சம் நகர்ந்துக் கொண்டு, என்னைப் பார்த்து,

“மூஞ்சியை பாரு….!” என்று கோபத்துடன் சொல்லிக் கொண்டே போனாள்.

அவள் கூட வந்த மாணவியோ எங்கள் இருவரையும் ஏற இறங்கப் பார்த்துக் கொண்டே போனாள்.

“என்னடா… இப்படி என்னை வம்பில் மாட்டி விடப் பாக்கிறே? அவள் வேறு என்னைப் பார்த்து மூஞ்சியைப் பாரு..ன்னு சொல்லிட்டுப் போறா!” என்றேன்.

அவனோ, “அவ மூஞ்சியை பாத்தியா?” என்றான்.

“பார்த்தேன்!” என்றேன் நான்.

“எப்படியிருந்தாள்?” என்றான் பிரகாசம்.

அப்போதுதான் அவள் முகம் என் மனக்கண் முன் வந்தது. அவள் மிகவும் அழகாக இருப்பதாக என் இதயத்தில் முதன் முறையாக ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

“அழகாகதான் இருந்தாள்!” என்றேன் நான்.

அடுத்த தடவை அவள் நமக்கு அருகே கடந்து செல்லும்போது, “மூஞ்சியைப் பார்த்தேன். அழகாகதான் இருக்கே! என்று சொல்லுடா “என்றான் அவன்.

‘இவன் ஏன் இப்படி புதுசா ஒரு வம்பில் நம்மை கோர்த்து விடப் பார்க்கிறான்’ என்று எனக்கு அப்போது தோன்றியது!

இரண்டு நாள் கழித்து அதேபோல ஒரு மதிய நேரத்தில் அதே போல் ஒரு சந்தர்ப்பம் வந்தது. சந்தர்ப்பம் வந்தது என்பதைவிட அப்படி ஒரு சந்தர்ப்பத்தை நாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டோம் என்பதுதான் உண்மை!

நான் விழப் பார்த்த அந்த அழகிய மாணவியும் வந்தாள். பாவடை தாவணியில், நல்ல வட்டமான முகத்துடன், நல்ல நிறத்துடன் இருந்தாள். எனக்கு அவள் இளம் வயது நடிகை சாவித்திரி போல இருப்பதாக மனதிற்கு பட்டது. என்னைப் பார்த்ததுமே அவள் கண்கள் படபடத்தது. அவள் அழகிய மூக்கு, உதடுகள், கன்னங்களெல்லாம் கூட ஏதோ பேசுவது போல எனக்குத் தோன்றியது.

என் கூட வந்த என் நண்பன் பிரகாசமோ, “அவளைப் பார்த்து, மூஞ்சியைப் பார்த்தேன். அழகாக இருந்தது என்று சொல்லுடா” என்று என் காதருகே கிசுகிசுத்தான்!

அவள் என் அருகே வந்து, எங்களை கடந்தபோது எனக்கு எதுவும் சொல்ல வரவில்லை. ஒரு படபடப்பில் வேர்த்துக் கொட்டியது. பயத்தில் பேசாமல் இருந்து விட்டேன். ‘நான் ஏதோ சொல்ல வருகிறேன்’ என்று அந்த இருவருக்குமே கொஞ்சம் புரிந்தது போலிருந்தது!

“என்னடா, இப்படி பேசாமல் இருந்து விட்டாய்? மூஞ்சியைப் பார்த்தேன். அழகாகதான் இருக்கே!என்று சொல்ல வேண்டியதுதானே!” என்றான் அவன்.

ஏனோ அவனுக்கு எங்கள் இருவருக்குமிடையே ஒரு மோதல் அல்லது காதலை ஏற்படுத்துவதில் ஒரு அளவு கடந்த ஆர்வம் இருப்பது போல் எனக்கு தோன்றியது!

நான், “ஒரே படபடப்பா இருந்துதுடா! பேச நா வரவில்லை!” என்றேன்.

“அடுத்த தடவை அவளைப் பார்க்கும்போது, ‘மூஞ்சியைப் பார்த்தேன். அழகாகதான் இருக்கே!’ என்று நீ சொல்றே?” என்றான் பிரகாசம்.

எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது!

அடுத்தநாளே, இதைபோல ஒரு மதியவேளையில், “ஏய்… உன் ஆளு இப்ப கிணற்றடிப் பக்கம் போயிருக்கா! நாம் இன்னும் சிறிது நேரம் கழித்து கிளம்பறோம். அவள் அந்த தென்னை மரத்துக்கிட்டே வருகிற மாதிரி பாத்துக்கிறோம். நீ, அவள் கிட்டே வரும்போது மூஞ்சியைப் பார்த்தேன். அழகாகதான் இருக்கே என்று நீ சொல்லுடா” என்று சொன்னான்.

அவன் ஏனோ கொஞ்சம் கொஞ்சமாக அவள் பக்கம் என்னைத் தள்ளிக் கொண்டிருப்பதாக தெரிந்தது. நானும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் பக்கம் விழுந்துக் கொண்டிருந்தேன்!

நாங்கள் அந்தத் தென்னை மரத்தைத் தாண்டி, வேப்ப மரத்தைக் கடந்தபோது, அவளும் அவள் தோழியும் வந்தனர்.

என் நண்பனோ, “சொல்லுடா…சொல்லுடா…” என்று என்னை லேசாக இடித்தான்.

அந்த அழகிய மாணவி என் அருகே வந்தபோது, நான் கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு, ‘மூஞ்சியைப் பார்த்தேன். அழகாகதான் இருக்கே!’ என்று சொல்வதற்கு பதிலாக, படபடப்பில் வசனத்தை மறந்து, “நீ நடிகை சாவித்திரி போல அழகாக இருக்கே!” என்று அவளிடம் சொல்லிவிட்டேன்!

அவளுக்கும் அவள் தோழிக்கும் திகைப்பு. பேசாமல் அவள் மட்டும் மிரண்டு சென்றாள். கூடவந்தவளோ, என்னை ஏற இறங்க பார்த்துக்கொண்டே சென்றாள்.

அவ்வளவுதான், அதிலிருந்து எனக்குள் ஏதோ ஒரு உணர்வு புகுந்துக்கொண்டு என்னை படாதபாடு படுத்த ஆரம்பித்தது. எப்ப பார்த்தாலும் அவள் நினைவே எனக்குள் படர்ந்து பரவ ஆரம்பித்தது.

ஒரு சாதாரண செப்பருத்திப் பூவை பார்த்தால் கூட, அந்த பூவில் கூட அவள் முகம் தெரிவது போலிருந்தது. ‘ஏதோ வம்பில் மாட்டப்போகிறாய்’ என்று என் உள்ளுணர்வு என்னை எச்சரிக்க ஆரம்பித்தது. ஆனாலும் அதைக் கேட்கும் நிலையில் நான் இல்லை!

‘அவள் பெயர் என்னவாக இருக்கும்?’ என்று யோசிக்க ஆரம்பித்தேன். எப்படி கண்டு பிடிக்கிறது? பிரகாசத்திடம் கேட்டதற்கு, “அடுத்த தடவை அவர்களை கடந்துப் போவது போல ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு, கேட்டு விடுவோம்!” என்றான் அவன்.

மறுநாளே அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தது.

பள்ளிக்கூட கிணற்றடியை கடந்து, அவளும் அவள் தோழியும் வந்தபோது, நானும் என் நண்பனும் மெதுவாக அவளை கடக்க ஆரம்பித்தோம்.

அவளுக்கும் எனக்கும் தூரம் ஒரு அரையடியாக வந்தபோது, “ஏய்… உன் பெயரென்ன?” என்றேன்.

அப்போது அவள் முகத்தில் கோபமோ, வெட்கமோ ஏதோ ஒரு உணர்வு லேசாக தோன்றி மறைந்தது. கூடவே வந்த அவளது அந்த தோழி, “பேரா….பேரு….பேரிக்காய்…. ஊரு… ஊறுகாய்…ஆசையை பாரு!” என்று நையாண்டியாக சொல்லிக்கொண்டே சென்றாள்!

அதன்பிறகு சிலநாட்கள் அவளை பார்க்கக்கூட முடியாதபடி சூழ்நிலை சாதாரணமாகச் சென்றது. சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை. எனக்கோ அவள் ஞாபகமாகவே இருந்தது. என் நண்பன் பிரகாசமோ கவலையில்லாமல் இருந்தான்!

அன்று மதியம் மறுபடியும் அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தது. அதாவது சந்தர்ப்பத்தை வரவழைத்துக் கொண்டோம்.

நாங்கள் அவர்களை கடந்தபோது அவளது தோழி, ” இவ பேரு சிவகாமி!” என்று எங்கள் காதில் விழும்படி சொன்னாள். அவளோ, “ஏண்டி என் பெயரை சொன்னே?” என்று அவளிடம் கோபமாக கேட்டபடியே சென்றாள்.

அவ்வளவுதான், பெயர் சிவகாமி என்று தெரிந்துவிட்டது. ‘இன்னும் அவளது ஊரைக் கண்டுபிடிக்கணும், அப்புறம் அவளது வீட்டைக் கண்டுபிடிக்கணும்’ என்று எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. ‘கண்டுபிடித்து,அதன்பிறகு என்ன செய்வது?’ என்றெல்லாம் அந்த வயதில் யோசிக்கத் தோன்றவில்லை!

***

எங்கள் பள்ளிக்கூடத்திற்கு எதிரே, பஞ்சாயத்துப் போர்டு நூலகம் ஒன்று இருந்தது. அதை ஒரு அலுவலர் வந்து மாலை நேரங்களில் திறந்து வைப்பார். அங்கே இரண்டு பெஞ்சும் பத்திரிகைகள் படிப்பதற்கு தகுந்தபடி ஒரு நீண்ட சாய்வு மேசையும் இருக்கும்.

அங்கே தினமணி, சுதேசமித்திரன், நவசக்தி போன்ற சில பேப்பர்களும் ஆனந்தவிகடன், கல்கி, தினமணி கதிர், கல்கண்டு, சோவியத் நாடு போன்ற பத்திரிகைகளும் இருக்கும். நான் அப்போதுதான் பத்திரிகைகளுக்கு துணுக்குகள், தினத்தந்திக்கு சிரிப்பு படம் போன்றவைகளை எழுத ஆரம்பித்திருந்த காலம்.

அப்போதெல்லாம் எனக்கு எம்.ஜி.ஆர் போல தமிழ்வாணனும் பெரிய ஹீரோ! அவரது கல்கண்டு பத்திரிகையை ஆவலுடன் படிப்பேன். அவரது தொப்பியும் கூலிங்கிளாஸும் போட்ட அவரது முத்திரை சித்திரமே என்னை மலைக்க வைக்கும்!

நான் அந்த பஞ்சாயத்துப் போர்டு நூலகத்திற்கு எப்போதும் என் நண்பன் பிரகாசத்துடன்தான் போவேன். அப்போது ஒரு தடவை கல்கி வாரப்பத்திரிகையில் வெளிவந்திருந்த ‘சிவகாமியின் சபதம்’ என்ற தொடர்கதையின் தலைப்பை அவனிடம் காட்டி, “இந்த பெயரை எவ்வளவு அழகாக ஓவியர் எழுதியிருக்கிறார் பார்!” என்றேன்.

அவ்வளவுதான், அந்த கல்கியை கையில் வாங்கிய அவன், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அந்தப் பக்கத்தை பிடித்துக்கொண்டு “அக்சூ…!” என்று போலியாக ஒரு தும்மல் தும்மினான்! அப்படி தும்மும்போதே அந்த சத்தத்திலேயே அந்த கல்கியின் பக்கத்தையும் கிழித்து, தனியே எடுத்து தனது கால்சட்டை பைக்குள் திணித்துக் கொண்டான். அந்த காகிதத்தை கிழித்த சத்தமும் அந்த தும்மல் சத்தத்துடன் கலந்துப் போய்விட்டது!

நாங்கள் இருவரும் அந்த நூலகத்திலிருந்து வெளியே வந்ததும் அந்த பக்கத்தை எடுத்து என்னிடம் கொடுத்தான். “இதிலுள்ள ‘சிவகாமி’ என்ற பெயரை மட்டும் பிளேடால் தனியே வெட்டி எடுத்து, ஒரு நோட்டில் ஒட்டிக்கொண்டுவா!” என்றான்.

எனக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. என் மனசு அறிந்து உதவுகிறானே என்று தோன்றியது. அந்த தொடர்கதைக்கு படம் வரைந்த ஓவியர் ஒவ்வொரு வாரமும் சிவகாமியின் சபதம் என்ற தலைப்பை விதம் விதமாக அழகழகாக எழுதியிருப்பார். அதனால் எனக்கும் அழகழகான எழுத்து வடிவில் ஒவ்வொரு வாரமும் ‘சிவகாமி’ என்ற பெயர் கிடைத்தது. நான் அவற்றை ஒரு நோட்டில் வரிசையாக ஒட்டி சேமித்து வந்தேன்.

அப்போதுதான் எங்களுக்கு ஒரு சோதனை வந்தது. இப்படி வாராவாரம் தொடர்ந்து கல்கியின் அந்த தொடர்கதையின் முதல் பக்கத்தை மட்டும் யாரோ, கிழித்து எடுத்துப் போவதைப்பற்றி அந்த பஞ்சாயத்துப் போர்டு அலுவலரிடம் யாரோ புகார் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அதனால் எங்களை பொறிவைத்து பிடிக்க காத்திருந்தார் அவர்!

அது தெரியாத நாங்கள் வழக்கம் போல அந்த நூலகத்திற்கு சென்றோம். அது கல்கி பத்திரிகை வந்திருக்கும் வியாழக்கிழமை வேறு! நான் அங்கே போய் சோவியத்நாடு பத்திரிகையை எடுத்து புரட்ட ஆரம்பித்தேன்.

எனக்கு உதவி செய்வதையே நோக்கமாக கொண்ட என் நண்பனோ, அந்தவார கல்கியை எடுத்துக் கொண்டு, கொஞ்சம் தூரமாக ஒரு ஓரமாக ஒரு இடத்தில் உட்கார்ந்துக் கொண்டான். சிறிது நேரத்தில் வழக்கம்போல ஒரு தும்மல் போட்டான். அவனையே ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்த அந்த பஞ்சாயத்து அலுவலர் எழுந்து என் நண்பன் பக்கம் சென்றார்.

அவன் கையிலிருந்த கல்கியை வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு, சிவகாமியின் சபதம் தொடர்கதையின் முதல் பக்கம் கிழிக்கப்பட்டிருப்பதை அறிந்து, அவனை எழுந்திருக்கச் சொன்னார்.

அவரே அவனது சட்டைப் பையில் கையை விட்டு கல்கி பத்திரிகையின் அந்த காகிதத்தை வெளியே எடுத்தார்.

அடுத்த நிமிஷமே கோபமாக, அவனை ‘பளா’ரென்று ஒரு அறைவிட்டார்! “ஏண்டா, இந்த திருட்டுத்தனம்? நல்லா இருக்கிற புத்தகத்தை எதற்கு இப்படி ஒவ்வொரு தடவையும் கிழிக்கணும்?” என்று உறுமினார். அதே சமயம் நான் நைசாக அந்த நூலகத்திலிருந்து நழுவி, வெளியே வந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து என் நண்பனும் நூலகத்திலிருந்து வெளியே வந்தான். அவன் முகம் வாடியிருந்தது.

“உன் காதலுக்கு உதவப்போய் நான் அறை வாங்கும்படியாகி விட்டது!” என்றான் வருத்தத்துடன். நான் அவனுக்கு ஆறுதல் சொல்லியதுடன் வருத்தமும் தெரிவித்துக் கொண்டேன். அதன்பிறகு அந்த நூலகம் பக்கமே நாங்கள் செல்லவில்லை!

அதன்பிறகு எனது நண்பன் பிரகாசம், சிவகாமி விஷயத்தில் கொஞ்சம் பட்டும் படாமல் இருந்தான். ஆனால் என்னால்தான் அப்படி இருக்க முடியவில்லை. எப்போதாவது அவளிடம் நான் பேச முயல்வதுடன் காலம் சலிப்பாக சென்றுக் கொண்டிருந்தது!

இப்படியே என் காதல் போய்கொண்டிருந்தால் என்னாவது முதலில் அவள் வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று நான் நினைத்தேன்!

***

ஒருநாள் அவள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குச் சென்றபோது நன்றாக இடைவெளி விட்டு அவளை நானும் பின் தொடர்ந்து சென்றேன். என் நண்பன் பிரகாசமோ வர மறுத்து விட்டான்!

அது பள்ளிக்கூடத்திலிருந்து எங்கள் ஊருக்குச் செல்லும் பாதையல்ல; இது எதிர் திசையில் இருந்தது. ஒரு கால் மணி நேரத்துக்குள்ளேயே அவள் வீடு வந்துவிட்டது. அது எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்தது!

நான் பின் தொடர்ந்து சென்ற அந்தச் சாலையின் ஓரத்தில் அவன் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு அல்லிக்குளம் இருந்தது. நான் அவளை பின் தொடர்ந்து சென்ற நேரம் மாலை நேரம் என்பதால் அல்லிமலர்கள் இதழ்களை மொட்டாக மூடியிருந்தன. அவள் வீட்டு வாசலில் ஒரு மகிழமரம் இருந்தது. அங்கே தரையில் பாய் விரித்தாற்போல மகிழமலர்கள் கொட்டிக் கிடந்தன. அதன் வாசனையே என்னை கிறங்க வைத்தது. அவளது வீடு அழகான மாடிவீடாக இருந்தது. அந்த வீட்டின் முகப்பில் ‘பாரதமாதா இல்லம்’ என்று எழுதியிருந்தது.

அவளது வீட்டைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் நான் திரும்பி வந்தேன். அதன்பிறகு என்ன செய்வது? எல்லோருக்கும் தோன்றுவதுபோல் எனக்கும் அவளுக்கு ஒரு கடிதம் எழுதலாமென்றுதான் தோன்றியது.

‘என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? எப்படி அதைக் கொடுப்பது?’ என்று ஏகப்பட்ட யோசனைகள்! நண்பன் பிரகாசத்தை கேட்டபோது, “ஐயோ… நான் இந்த வம்புக்கே வரவில்லை!” என்று மறுத்து விட்டான். அவன் அந்த ஒரு அறையிலேயே அடியோடு மாறிப் போய்விட்டான்!

நான் வீட்டில் உட்கார்ந்து என்ன எழுதலாம் என்று யோசித்தபோது, அந்த அழகிய சிவகாமிக்கு ஒரு கவிதை எழுதிக் கொடுக்கலாமென்று தோன்றியது.

அவள் வீட்டிற்கு பக்கத்திலிருந்த அல்லிக்குளம், அவள் வீட்டுக்கு வெளியே இருந்த மகிழமரம், அவளது வீட்டின் பெயரான பாரதமாதா இல்லம் எல்லாம் என் ஞாபகத்திற்கு வந்தது.

அந்த சிவகாமியின் அப்பா ஒரு சுதந்திரப் போராட்டக்காரர் என்பதும், அதனால்தான் அவர் தனது வீட்டுக்கு பாரதமாதா இல்லம் என்று பெயர் வைத்ததுடன் தனது மகளுக்கும் பெருந்தலைவர் காமராஜரின் தாயாரின் பெயரான சிவகாமியம்மாளின் பெயரை வைத்திருக்கிறார் என்பதும் எனக்கு பிற்காலத்தில்தான் தெரியும்!

சரி, கவிதைக்கு வருகிறேன். நான் என்ன கவிஞர் கண்ணதாசனா? நினைத்த உடனே கவிதை எழுதுவதற்கு!

முதலில், ‘அல்லி மலர்கள் மலர்ந்தடி’ என்ற வரி ஞாபகத்திற்கு வத்தது. அதன்பிறகு மகிழமலர், அதன்பிறகு அவளது நிறமான மாம்பழம், அதன்பிறகு பாரதமாதா என்று வார்த்தைகள் தோன்றின.

‘அல்லி மலர்கள் மலர்ந்தடி !

உன்அழகு மேனி தெரிந்தடி!

மகிழ மலர்கள் மலர்ந்தடி-!

உன்மாம்பழ மேனி தெரிந்தடி!

பாரதமாதாவின் செல்வம் நீ

நான்பார்த்து மகிழும் சிவகாமி!

-எந்தஅகிலத்திலும் உன்போல்

பெண்களில்லை ! உன்அழகிற்கு

ஈடு இணையேதுமில்லை!’

என்று எழுதி முடித்தபோது, எனக்கு அது மிகவும் திருப்தியாக இருந்தது!

அதை எப்படி கொடுப்பது? பள்ளிக்கூடத்தில் ஆபத்து அதிகம் என்று தோன்றியது.

பிரகாசத்திடம் யோசனை கேட்டதற்கு, “இத்துடன் இந்த விளையாட்டையெல்லாம் விட்டுவிடுடா! அல்லது நீயும் அறை வாங்குவாய்!” என்றான்.

என்னால்தான் விட முடியவில்லை! இரண்டு நாளைக்கு பிறகு ஒரு மாலை நேரத்தில் அவள் வீட்டுக்குப் பக்கமாக போய் பார்க்கலாம் என்று தோன்றியது.

‘சும்மாயிருந்த என்னை பைத்தியமாக அலையவிட்டுவிட்டானே, இந்த பிரகாசம்!’ என்று அப்போது தோன்றியது.

நான் அவள் வீடு இருந்த திசையில் நடந்தேன். என் கையில் அவளுக்காக நான் எழுதிய கவிதை இருந்தது!

நான் அவள் வீட்டையடைந்தபோது, என் நேரம், அவள் அவளது வீட்டு வாசலில் தெருவோரம் உதிர்ந்து கிடக்கும் மகிழமலர்களை பொறுக்கி ஒரு கிண்ணத்தில் சேகரித்துக் கொண்டிருந்தாள்.

என் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. இது கிடைப்பதற்கரிய நல்ல சந்தர்ப்பம் என்று தோன்றியது. தார்ரோட்டிலிருந்து அவள் வீட்டின் ஓரமாக இருந்த அந்த மகிழமரத்தை நெருங்கினேன். மனசு ஏனோ திக் திக்கென்றது. அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். நான் தயராக மடித்து வைத்திருந்த அந்த கவிதை காகிதத்தை அவள் அருகே கீழேப் போட்டேன்! அவள் முகத்தில் ஒரு திகைப்பும் மிரட்சியும் தெரிந்தது. உடனே வேகமாக திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். ஒரு பத்தடி தூரம் நடந்தபிறகு, கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை திரும்பிப் பார்த்தேன். அந்த சிவகாமி என் கவிதையை படித்துக் கொண்டிருந்தாள்! என் மனது ஜில்லென்று இருந்தது!

அடுத்து இன்னும் பத்து பதினைந்து அடிகள்தான் நடந்திருப்பேன். மறுபடியும் நான் திரும்பிப் பார்த்தபோது, அவளது வீட்டின் உள்ளேயிருந்து ஒருவர் வந்து, அவளிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அது அவளுடைய அண்ணன்தான் என்பது எனக்கு அப்போது நன்றாக உறைத்தது.

அதே சமயம் அவர் கைதட்டி கூப்பிடும் சத்தமும் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். அவர்தான் என்னை கூப்பிட்டார்.

எனக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது! காதில் விழாத மாதிரி தப்பி செல்லமுடியாது என்று தெரிந்தது. தெருவிலும் யாரையும் காணோம். மிகவும் பயமாக இருந்தது!

அப்போது சிவகாமி வேகமாக வீட்டுக்குள் செல்வதும் அவளது அண்ணன் என்னை நோக்கி வருவதும் தெரிந்தது.

என் அருகே வந்து, “இங்கே வீட்டுக்கு வா!” என்றார்.

நல்ல முரடராக இருந்தார். ஒரு இருபத்தைந்து வயசு இருக்கும். முரட்டு மீசை வைத்திருந்தார்.

அவளது வீட்டுக்கு எதிரே, அந்த மகிழ மரத்தடியிலேயே என்னை நிற்க வைத்து, என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தார்.

‘நான் யார்? எந்த ஊர்? சிவகாமியை எப்படித் தெரியும்?’ என்று பல கேள்விகள். என்னை தவிக்க வைத்துவிட்டார்.

இப்படித் தன்னந்தனியாக வந்து மாட்டிக் கொண்டோமேயென்று தோன்றியது. கடைசியாக இனி இந்த பக்கம் வந்தாலோ, பள்ளிக்கூடத்தில் சிவகாமியிடம் பேச முயன்றாலோ , கை, கால் இருக்காது என்னை மிகக் கடுமையாக மிரட்டி அனுப்பினார். நான் தப்பினால் போதுமென்று வந்து சேர்ந்தேன்!

அப்புறமென்ன நான் அன்றிலிருந்து அந்த சிவகாமி பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

அந்த பள்ளிக்கூட காதல் அதோடு பாதியிலேயே முடிந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *