தஞ்சை, ஆக. 6–
பாதாள சாக்கடை சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டிய போது மண் சரிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட 2 தொழிலாளர்களில்,
ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை லாயம் பகுதி ஜெகநாதன் நகரில் பாதாள சாக்கடையிலிருந்து அடிக்கடி கழிவு நீர் வழிந்து சாலையிலும், சாலையோர வாரியிலும் ஓடியது. இதனால், ஏற்பட்ட துர்நாற்றத்தால் அவதியடைந்து வந்த பொதுமக்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். உடன் நடவடிக்கை எடுக்கப்படாதததால், அப்பகுதி மக்கள் 10 நாள்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒரு தொழிலாளி பலி
இந்நிலையில் பழைய குழாயை அகற்றிவிட்டு, புதிய குழாய் பதிப்பதற்காக 15 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்ததில், வேலை செய்து வந்த தஞ்சாவூர் தேவபூமி நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ஜெயநாராயணமூர்த்தி (வயது 27), புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, வளம்பப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் தேவேந்திரன் (வயது 32) ஆகிய ஆகியோர் மண் சரிவில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மற்ற தொழிலாளர்களுடன் இணைந்து இடுப்பளவு மண்ணில் சிக்கியிருந்த தேவேந்திரனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மண்ணுக்குள் சிக்கிய ஜெயநாராயணமூர்த்தியை மீட்க 3 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பள்ளம் தோண்டப்பட்டது. தகவலறிந்த மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியை விரைவுபடுத்தினர். மண்ணில் புதைந்த ஜெயநாராயண மூர்த்தியை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயநாராயண மூர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.