அறைகள் சொல்லும் கதைகள்
அந்தப் பிரதான காேயிலின் வாசல் முகப்பில், இடது பக்கம் இருந்தது பக்தர்கள் பாதணிகளைப் பாதுகாக்கும் அறை .கோயிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் அந்தப் பாதுகாப்பு அறையில் தங்கள் பாதணிகளை விட்டு விட்டு, அதற்குரிய டோக்கனை வாங்கி விட்டு தான் செல்வார்கள். அதி காலையிலிருந்து இரவு 8 மணி வரை பாதணிகளைப் பாதுகாக்கும் அறையில் அதன் பாதுகாவலராக இருந்தார் ,பெருமாள். அந்தக் கோயிலும் பெருமாள் கோயில் தான். பாதணிகளைப் பாதுகாக்கும் காவலர் பெயரும் பெருமாள் தான் என்னவொரு சாலப்பொருத்தம்.
கருவறையில் இருக்கும் கடவுளின் பெயரும் பெருமாள். பாதணிகள் பாதுகாக்கும் அறையில் காவலராக இருப்பவர் பெயரும் பெருமாள் என்ன ஒற்றுமை என்று , பெருமைப்பட்டுக் கொள்வார் பெருமாள்.
தினமும் காலையில் காேயிலுக்கு வருபவர்,இரவு நடை சாத்தும் வரை அந்த இடத்தை விட்டு எள்ளளவு கூட நகர மாட்டார். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர்கள் போட்டிருக்கும் பாதணிகளைத் தொட்டுக் கையில் வாங்கும் பாேதும் காேயிலுக்கு பாேய் வெளியே வரும் பாேது, அதைக் கையில் எடுத்துக் கொடுக்கும் போதும் ஒரு நாள் கூட அவர் முகம் சுளித்ததே இல்லை .பெருமாளை மதிப்பதற்கு அங்கு யாரும் இல்லை. பாதணிகளைக் கழட்டி விட்டு அதற்குரிய டோக்கனை வாங்கிய போதும் டோக்கனைக் கொடுத்து பாதணிகளை வாங்கும் போதும் ஒரு வார்த்தை கூட பெருமாளிடம் யாரும் பேசியதில்லை. அதை ஒரு பொருட்டாகவும் அவர் நினைப்பதில்லை. யாராவது பாதணிகளைப் பாதுகாப்பதற்கு பணம் கொடுத்தால், ஐயோ அதெல்லாம் தப்பு வேண்டாம். இலவசமாகத் தான் இங்க பாதணிகள பாதுகாக்கிறது வச்சிருக்காங்க. நான் காசு வாங்குறது தெரிஞ்சா அது கடவுளுக்கு அடுக்காது”என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு காசு வாங்க மறுப்பார் பெருமாள்.
அவர் செயல், கோயில் நிர்வாகம் வரைக்கும் தெரிந்ததால் பெருமாள் உண்மையான மனிதர் என்று பேசிக்கொள்வார்கள். ஆறுகால பூஜை நடக்கும் பெருமாள் கோயிலில் ஒரு கால பூஜைக்குக் கூட இதுவரை அவர் சென்றதில்லை. கோயிலில் ஒலிக்கும் மந்திரச் சத்தங்கள் மட்டுமே அவர் காதில் கேட்குமேயொழிய, கருவறையின் முன்னால் அமர்ந்து கடவுளைத் தரிசிக்கவும் பிரகாரங்களில் நடந்து, ஆலயங்களைச் சுற்றி வரவும் அவரால் முடியவில்லை. முழு நேரமும் பாதணிகளைப் பாதுகாக்கும் இடத்திலே இருப்பார்.
” என்ன பெருமாளே. உனக்கும் அதே பேரு தான். எனக்கும் அதே பேருதான். நீ கருவறையில இருக்கிற . நான் செருப்ப பாத்துட்டு இருக்குறேன். உன்ன பாக்குறதும் கூட்டம் அலை மாேதுது என்கிட்ட செருப்ப வாங்குறதுக்கும் கூட்டம் அலைமாேதுது. ஆனா ஒனக்கு வேற மாதிரி. எனக்கு வேற மரியாதை ” என்று அவருக்கு அவரே சிரித்துக் கொள்வார். பெருமாள் .
அன்று, ஆறு கால பூஜை முடித்து கோயில் நடை சாத்தப்படும் போது, சாத்தப்பன் குடும்பம் காரில் வந்து இறங்கினார்கள். அவர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் தங்கள் செருப்புகளைப் பாதணிகள் பாதுகாக்கும் அறையில் கொடுத்துவிட்டு அவர்கள் கோயிலுக்குள் நுழையும்போது, கோயிலின் நடை சாத்தப்பட்டது.
நாங்க சாமி கும்பிடலாமா? என்று அங்கிருந்த காவலாளியிடம் கேட்க எல்லா சன்னதியும் பூட்டு போட்டு பூட்டியாச்சு .அடச்ச கோயில கும்பிடுறது அவ்வளவு நல்லது இல்ல .நீங்க நாளைக்கு வாங்க ” என்று அங்கிருந்த காவலாளி சொல்ல
“நாளைக்கு என் பொண்ணுக்கு ஒரு இன்டர்வியூ ரிட்டன் எக்ஸாம் எல்லாம் பாஸ் பண்ணிட்டா. நாளைக்கு இன்டர்வியூல என்ன நடக்கும்னு தெரியல. பெருமாளக் கும்பிட்டு போனா நல்லா இருக்கும்னு ஓடிவந்தோம். இப்படி ஆயிருச்சு” என்று வருத்தப்பட்டார்,
சாத்தப்பன்.
” ஒன்னும் கவலைப்படாதீங்க. நீங்க கொஞ்சம் முன்னாடி வந்து இருக்கணும். எங்களச் சொல்லி என்ன குற்றம்? நடை சாத்தியாச்சு. நாளைக்கு வாங்க ” என்று எந்த ஈரமும் இல்லாமல் பதில் சொன்னான் கோயில் காவலாளி. வேறு வழியின்றி சாத்தப்பனும் அவரின் மனைவி, மகள் சாந்தினியும் கோயிலை விட்டு வெளியேறினார்கள்.
” சரி செருப்ப வாங்கிட்டு போயிடலாம்” என்று நினைத்தவர்கள் . பாதணிகள் பாதுகாப்பு அறைக்குச் சென்றார்கள். போனதும் திரும்பி வந்ததை பார்த்த பெருமாள்
“என்ன சார் , என்ன ஆச்சு ? போனதும் திரும்பி வந்துட்டீங்களே? என்று கேட்க
” நடை சாத்தியாச்சாம். கோவிலுக்குள்ள பாேக முடியாது. நாளைக்கு வரச் சொல்லிட்டாங்க. அதான் திரும்பி வந்துட்டோம்” என்று சாத்தப்பன் சொல்ல
” இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன? அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம் முன்ன பின்ன ஆகுறதுல என்ன தப்பு இருக்கு? இந்த பூசாரிகளே இப்படித்தான். என்ன காரணத்துக்கு அய்யா கோயிலுக்கு போக நினைச்சீங்க ” என்று பெருமாள் கேட்க, அருகில் இருந்த தன் மகள் சந்தியாவைச் சுட்டிக்காட்டிய சாத்தப்பன்
“இவ என் மகள் நாளைக்கு ஒரு வேலைக்கான இன்டர்வியூ போறா. அதுக்கு முன்னாடி பெருமாள் கிட்ட ஒரு பூஜை பண்ணிட்டு போலாம்னு வந்தாேம். ஆனா அது நடக்கல கஷ்டமா இருக்கு ” என்று சாத்தப்பன் சொல்ல
” அதுக்கு என்னய்யா. புள்ளைக்கு எந்தக் குறையும் வராது. நாளைக்கு நடக்கிற இன்டர்வியுல முதல் இடத்தில புள்ள ஜெயிப்பா ” என்று பெருமாள் சொல்ல,
இதைக் கேட்ட சாத்தப்பன் கண்கள் பணித்தன. அவர்களுக்கான செருப்புகளை எடுத்துக் கொடுத்தார், பெருமாள். அவர் சொல்லியதற்கு பதில் ஏதும் சொல்லாத சாத்தப்பன் குடும்பம் புன்னகையைக் கூட அதிகமாகச் செலவழிக்காமல் தங்கள் பாதணிகளை வாங்கிக் கொண்டு வெளியேறினார்கள்.
மறுநாள் இன்டர்வியூக்கு போனாள், சாந்தினி. எப்படியும் அந்த வேலை கிடைத்துவிட வேண்டும் என்று குடும்பமே வேள்வி போல இருந்தார்கள். ஒன்று , இரண்டு, மூன்று என்று ஆட்களை வெளியே அனுப்பி கொண்டிருந்தார்கள். அப்போது சாந்தினியும் அழைக்கப்பட்டாள்.
” தைரியமா பதில் சொல்லும்மா பெருமாள் கூட இருப்பார்” என்று வாழ்த்து சொல்லி வழி அனுப்பினார், சாத்தப்பன்.நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விகள் அத்தனைக்கும் சரியாக பதில் சொன்னாள், சந்தியா.வெரிகுட். கீப் இட் அப் என்று சந்தியாவை வாழ்த்தினார்கள். மறுநாள், சந்தியாஇந்தியாவிலேயே முதலாகத் தேர்வு செய்யப்பட்டாள், சந்தியா.இதைக் கேட்டதும் சந்தோஷட்டனர் சாத்தப்பன் குடும்பத்தினர்கள். நேராக பெருமாள் கோவிலுக்கு வந்தார்கள். நடை சாத்தியாச்சு. கோயில் மூடியாச்சு. பூஜை பண்ண முடியாது ” என்று முன்பு சொன்ன அதே காவலாளி, அன்றும் சாத்தப்பன் குடும்பத்தை வரவேற்றான்
” ஐயா இன்னைக்கு சரியான நேரத்துக்க வந்திருக்கிங்க. கோயில் திறந்து தான் இருக்கு. நீங்க எவ்வளவு நேரம் ஆனாலும் சாமி கும்பிடலாம்” என்று வரவேற்றான் அந்தக் காவலாளி புன்னகை செய்து கொண்ட சாத்தப்பன் பாதணிகள் பாதுகாப்பு அறைக்குச் சென்றார்.
” செருப்புகள விட்டுட்டு கோயிலுக்குள்ள வருவாங்க
பாேல ” என்று நினைத்தான் அந்தக் காவலாளி.
பாதணிகள் பாதுகாக்கும் அறைக்குச் சென்ற சாத்தப்பன் தான் வாங்கி வந்த மாலையைப் பிரித்தார். அப்போது ஒரு குடும்பம்
” அந்த எட்டாம் நம்பர் டோக்கன்ல இருக்கிறது எங்க செருப்பு. மொத்தம் அஞ்சு இருக்கும் .எங்க மொத்தக் குடும்பச் செருப்பும் அதுல தான் இருக்கு ” என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
“இந்தா தாரேன்” என்று உடனே அத்தனை செருப்புகளையும் எடுத்துக் காெடுத்தார் , பெருமாள்
அப்போது , பெருமாளைப் பார்த்த சாத்தப்பன்
” ஐயா கொஞ்சம் இப்படி வாங்க “
” எதுக்கு கூப்பிடுறாரு? நேத்து செருப்ப ஏதும் மறந்து வச்சிட்டு போயிட்டாரா? என்று திரு திருவென்று விழித்தார் பெருமாள்.
கடவுளுக்கு வாங்கி வந்த அந்த ஆளுயர மாலையைப் பட்டென பெருமாளின் கழுத்தில் போட்டார் சாத்தப்பன்
” ஐயா என்ன பண்றீங்க?” என்று பதறிக் கேட்டார் பெருமாள்
” ஐயா நீங்க சொன்னது சரிதான். என் பொண்ணு இன்டர்வியூல பாஸ் பண்ணிட்டா. வேல கிடைச்சிருச்சு. நீங்க சொன்ன வாழ்த்து மாதிரியே என் பொண்ணு இந்தியாவிலே முதலிடத்துக்கு வந்துட்டா ஆசிர்வாதம் பண்ணுங்க ” என்று சொல்லிய சாத்தப்பன் ஆளு உயர மாலையைப் பெருமாள் கழுத்தில் போட்டு சந்தியாவை பெருமாளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சொன்னார்.
“ஐயா என்ன பண்றீங்க? கோயில் அங்க இருக்கு. சாமி அங்க இருக்கு. என் கால்ல விழுகுறீங்களே? அதுவும் செருப்ப பாதுகாக்கிற என் கால்ல விழுகிறது தப்புய்யா” என்று பெருமாள் பதற
“ஐயா நீங்க தான் எங்களுக்கு சாமி. நீங்க சொன்னது மாதிரியே பலிச்சது. கடவுள் நம்மள மாதிரி மனுசங்கள்ல இருந்தும் வருவார். அதை நாங்க பார்த்துட்டோம். நீங்க தான் எங்களுக்கு கடவுள்” என்று சொன்னார் சாத்தப்பன்.
” நீங்க பண்றது தப்புய்யா” என்று பதறினார் பெருமாள்.
” அதெல்லாம் ஒன்னும் இல்ல. எங்க மனசுக்கு இது புடிச்சு தான் செய்றோம். இதக் கடவுள் கோவிச்சுக்க மாட்டார்ன்னு நினைக்கிறோம் ” என்று சொல்லிய சாத்தப்பன் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்கள்.
ஐயோ இவ்வளவு பண்ணிட்டு, அந்தப் பெரியவர் பேரக் கேக்க மறந்துட்டேனே”
” ஆமாப்பா அவரு பேர் என்னன்னு கேட்கலாமே? என்று சந்தியாவும் சொல்ல ,மொத்தக் குடும்பமும் பாதணிகள் பாதுகாப்பு அறைக்குச் சென்றார்கள் .அங்கே செருப்புகளை வாங்கியும் கொடுத்தும் கொண்டிருந்தார் பெருமாள்.
” ஐயா அவசரத்தில உங்க பேர கேக்க மறந்துட்டாேம். உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா? என்று சாத்தப்பன் கேட்க
” என் பேரு பெருமாள் ” என்றார் பாதணிகளைப் பாதுகாக்கும் காவலர்.
” அப்போது கோயிலில் இருந்து இறைவன் பெருமாளுக்குச் சொல்லப்படும் பூஜை மந்திரம், பாதணிகள் பாதுகாப்பு அறையில் எதிரொலித்தது.
இதைக் கேட்ட சாத்தப்பன் குடும்பம் பாதணிகளைப் பாதுகாக்கும் காவலர் பெருமாளைக் கும்பிட்டபடியே விகித்து நின்றார்கள்.
பெருமாள் தன் பணியிலேயே குறியாக இருந்தார்.
பாதி படிக்கும் போதே முடிவைத்
தெரிந்துகொண்டேன்.