செய்திகள்

‘‘பாட்ஷா பட விழாவில் ஜெயலலிதா பற்றி அப்படிப் பேசி இருக்கக் கூடாது’’ : 30 ஆண்டுகளுக்கு பின் ரஜினி வருத்தம்

Makkal Kural Official

சென்னை, ஏப். 9–

‘பாட்ஷா’ படத்தின் 100-வது நாள் விழாவில் தமிழ்நாட்டின் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து நான் பேசியிருக்கக்கூடாது. அப்போது எனக்கு அந்த அளவுக்குத் தெளிவு இல்லை” என 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு குறித்து நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டு, அதற்கு இப்போது வருந்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சரும், சத்யா மூவிஸ் நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று. அதையொட்டி ஆர்எம்வீ பற்றிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அவர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

‘‘என் மீது அதீத அன்பு பொழிந்தவர்கள் சிலர். பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் இல்லை எனும்போது சில நேரங்களில் கடினமாக இருக்கிறது. அவர்களை மிகவும் ‘‘மிஸ்’’ செய்கிறேன்.

‘பாட்ஷா’ படத்தின் 100-வது நாள் விழாவில் தமிழ்நாட்டின் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து நான் பேசினேன். அவரை வைத்துக்கொண்டு நான் பேசியிருக்கக்கூடாது. அப்போது எனக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை. அண்ணா திமுகவில் அவர் அமைச்சராக இருந்தார்.

மறையாத வடு

‘நீங்கள் அமைச்சர். மேடையில் இருக்கும்போது, அரசுக்கு எதிராக ரஜினி எப்படி பேசலாம்?’ எனக் கூறி, ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டார் ஜெயலலிதா. இந்தத் தகவலை அறிந்து ஆடிப்போனேன். என்னால் தான் இப்படி நடந்துவிட்டது என்பதால் இரவெல்லாம் எனக்கு தூக்கம் வரவில்லை. அவரைத் தொடர்புகொண்டு மன்னிப்புக் கேட்டேன். ஆனால், அவர் எதுவும் நடக்காதது போல பேசினார். சர்வ சாதாரணமாக பேசினார். ஆனால் என் மனதில் இருந்து அந்த வடு மறையவே இல்லை.

ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க சில காரணங்கள் இருந்தாலும், இந்த காரணம் மிகவும் முக்கியமானது. நான் ஜெயலலிதாவிடம் பேசவா எனக் கூட கேட்டேன். ஆனால் அவர் உங்கள் மரியாதையை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அப்படி ஒரு பெரிய மனிதர் அவர். ரியல் கிங் மேக்கர்”.

இவ்வாறு அதில் ரஜினி பேசியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *