பாட்னா, மே 17–
பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் பள்ளியில் சடலமாக மீட்கப்ட்டதால் பள்ளிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் ஓர் தனியார் பள்ளியில் 4 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான். இதுகுறித்து போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், அந்த சிறுவன் பயின்று பள்ளி வளாகத்தில் சிறுவனின் உடல் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு தீ வைத்த மக்கள்
மேலும், அந்த மாணவன் பள்ளிக்குள் சென்றது சிசிடிவியில் பதிவாகி இருந்ததாகவும், அதன் பின்னர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பாட்னா எஸ்.பி சந்திர பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறினார். பள்ளி வளாகத்தில் சிறுவனின் உடல் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததால், காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை செய்து வருகிறோம் என்றும், இதுவரை 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தார்.
இதற்கிடையில், காணாமல் போன சிறுவனின் உடல் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளிக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.