கதைகள் பாண்டிய கட்டபொம்மன்

‘பாஞ்சை சிங்கம் ஜாக்சனை பந்தாடிய இடம்’

Makkal Kural Official

கட்டபொம்மன் –3

‘கவுல்’ கொடுத்ததால் தான் ராமநாதபுரத்துக்கு வந்தததாக கட்டபொம்மன் தெரிவிக்கிறார். அங்கு ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சண்டை நடக்கிறது. படைவீரர்களுடன் வரக்கூடாது என ஆங்கிலேயர்கள் கவுலில் சொல்லி உள்ளார்கள். ஆனால் காலாட்படை, குதிரைப்படை என 4 ஆயிரம் படை வீரர்களுடன் கட்டபொம்மன் சென்றிருக்கிறார்.

அங்கு தான், சினிமாவில் வருவது போல், எங்களிடம் வரி கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, இது எங்கள் மண். நீ வியாபாரத்துக்கு வந்தவன், நீ ஏன் எங்களை ஆள நினைக்கிறாய் என்று, ஜாக்சன் துரையுடன் கடும் வாக்குவாதம் நடக்கிறது.

அங்கு கட்டபொம்மன் உட்காருவதற்கு நாற்காலிகூட போடப்படாமல் அவமதித்து உள்ளனர். இவரே நாற்காலியை பறித்து உட்கார்ந்து இருக்கிறார். கட்டபொம்மனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஆங்கிலேயர்கள் நம்மை கைது செய்வதையே நோக்கமாக கொண்டிருப்பதை கட்டபொம்மன் உணர்கிறார்.

அண்ணா… இவர்கள் நம்மை சிறைப்படுத்த சதி திட்ட தீட்டுகின்றனர் என தம்பி ஊமைத்துரை கட்டபொம்மனை எச்சரிக்கிறார். தப்பிக்க பார்க்கிறார்கள். அங்கு இருந்த கிளார்க் என்ற அதிகாரி இருவரையும் தடுக்கப்பார்க்கிறார். அவரை வெட்டி விட்டு, மாடியிலிருந்து குதித்து தப்பி விடுகின்றனர்.

ராமலிங்க விலாஸில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்றும் ராமநாதபுரத்தில் அந்த இடம் நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு ‘பாஞ்சை சிங்கம் ஜாக்சனை பந்தாடிய இடம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

போர் நடக்கும் தருணத்திலும்…

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை ஆங்கிலேயர்கள் தங்களது மேல் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். கட்டபொம்மன் பற்றி அப்படிகொடுக்கும் ரிப்போர்ட்டில் ஜாக்சன் துரையின் பதில்களில் உண்மை தன்மை இல்லை என கூறி, ஜாக்சன்துரை பதவி நீக்கம் செய்யப்படுகிறார்.

கட்டபொம்மனை பணிய வைக்க புதிதாக லூசிங்டன் என்ற கலெக்டர் நியமிக்கப்படுகிறார். இந்த நிலையில்தான், 1799ஆம் ஆண்டு ஜான் பேனர்மேன் என்ற அதிகாரி தலைமையில், செப்டம்பர் 4ந் தேதி பாளையங்கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்கள் படையெடுத்து வருகிறார்கள்.

5ந் தேதி பாஞ்சாலங்குறிச்சியை சூழ்ந்து கொள்கிறார்கள். அப்போது கோட்டையில் கட்டபொம்மன் இருந்துள்ளார். கடும் சண்டை நடக்கிறது. இந்த சண்டையின் போது தான், ஆங்கிலேய தளபதிகள் ஐந்து பேர் கொல்லப்படுகின்றனர். இவர்களது கல்லறை ஒட்டப்பிடாரம் அருகே இன்றும் உள்ளது.

6ந் தேதி காலையில் ஊமைத்துரை உள்ளிட்டவர்களுடன் கோட்டையிலிருந்து கட்டபொம்மன் தப்பி செல்கிறார்.

அப்போது கூட ஆங்கிலேயர் கட்டபொம்மனை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். அந்த தருணத்தில் கூட கட்டபொம்மன் ‘கவுல்’ கொடுத்தால் பேச்சுவார்த்தைக்கு வருகிறேன் என்று சொல்லி, சுயமரியாதையுடன் நடந்து இருக்கிறார். (3வது பாகம்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *