செய்திகள்

பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக குஜராத்தில் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி

காந்தி நகர், ஏப். 23–

குஜராத்தில் சூரத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பு மனு செல்லாது என்று அறிவித்த தேர்தல் ஆணையம், பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால், பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 7ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் பாஜக, காங்கிரஸ் கட்சி உள்பட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. அதனை அடுத்து காங்கிரஸ் கட்சி, சூரத் நாடாளுமன்ற தொகுதிக்கு மாற்று வேட்பாளரை அறிவித்தது. காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார்.

போட்டியின்றி வெற்றியா?

இதனைத் தொடர்ந்து, சுரேஷ் பத்ஷாலாவின் வேட்பு மனுவில், போலியான சாட்சி கையெழுத்துக்கள் இடம் பெற்றதாக கூறி, அந்த வேட்பு மனுவும் தகுதியற்றது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து காங்கிரஸ் கட்சி போட்டியில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில், சுயேட்சைகளாக போட்டியிட்ட 9 பேரின் மனுக்கள் வாபஸ் பெற வைக்கப்பட்டது. மேலும் வாபஸ் பெறாமல் இருந்த பகுஜன் சமாஜ் வேட்பாளரையும் வேட்பு மனுவை திரும்ப பெற வைத்தனர். இதனையடுத்து, சூரத் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் முகிலேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெயராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்ய பாஜக முயற்சி செய்து வருகிறது. ஏனெனில், பாஜக ஆட்சி மேல், மக்களிடம் எழுந்துள்ள கோபத்தை கண்டு பயந்து உள்ளது பாஜக என, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *