காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டு
டெல்லி, மே 16–
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஒருவேளை வெற்றி பெற்றால், 22 கோடீஸ்வரர்களே நாட்டை ஆள்வார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத்தாக்கல் செய்ய மே-14 ஆம் தேதி இறுதி நாள் என்பதால், ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடுவோர் நேற்று முன்தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், ஒடிசாவின் 5 தொகுதிகளில் மே – 20 ஆம் தேதி 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, ஒடிசாவின் போலாங்கீர் பகுதியில் நேற்று காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:–
‘இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழிக்க பாஜக விரும்புகிறது. இதை காங்கிரஸ் கட்சியும், நாட்டு மக்களும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அரசமைப்புச் சட்டத்தால் தான், ஏழைகள், தலித் சமூகத்தினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் பலனடைந்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றால், தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வர்.
22 பேருக்கு ரூ.16 லட்சம் கோடி
பாஜக இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் 22 கோடீஸ்வரர்களே நாட்டை ஆள்வர். பாஜக ஆட்சியில் இந்த 22 பேரின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 24 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு நிகரானதாகும்.
நாட்டு மக்களுக்காக பாஜக எதையும் செய்யவில்லை. மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யவில்லை. சிறு தொழில்களுக்கு கடன்கள் தரப்படவில்லை. பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சரக்கு-சேவை வரி, ஒரு சில நபர்களின் வசம் செல்கிறது. இந்த நிலை மாற வேண்டுமெனில், மத்தியில் மக்களின் அரசு அமைய வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தலித் சமூகத்தினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையாக இடஒதுக்கீடு வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 22 கோடீஸ்வரர்களுக்காக மட்டுமே பாஜக பாடுபட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கான ‘லட்சாதிபதிகளை’ உருவாக்க இருக்கிறோம். ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரப் போவது உறுதி. அதன் பிறகு ஏழைக் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு, குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மாதம் ரூ.8,500 உதவித் தொகை வழங்கப்படும். இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார்.