பெங்களூரு, மார்ச் 4–
கர்நாடகா தேர்தலை முன்னிட்டு பாஜகவினர் ஓட்டு கேட்க வந்தால், அவர்களை செருப்பால் அடியுங்கள் என இந்து சேனா தலைவர் கொதிப்புடன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பாஜகவின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் அரசு பணிகளை டெண்டர் எடுக்க 40 சதவிகித கமிசன் கொடுக்க வேண்டும் என்பதும் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று நடத்திய ரெய்டில், கர்நாடக பாஜக எம்எல்ஏ லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதும் பாஜகவின் கரும்புள்ளியாக உள்ளது. இந்நிலையில் பாஜக ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் ஊழலை ஒழிப்போம் என அமித்ஷா பேசியது பேசுபொருளானது.
செருப்பால் அடியுங்கள்
இந்தநிலையில், கர்நாடகாவின் ராஷ்டிரிய இந்து சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறும்போது:–
‘‘மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் வாக்கு கேட்கிறார்கள். நீங்கள் வளர்ச்சியை கொண்டு வந்தீர்கள் என்றால், பசுக்களை மீட்டீர்கள் என்றால், இந்துத்துவாவுக்காக உழைத்தீர்கள் என்றால், அதை வாக்காளர்களிடம் சொல்லுங்கள். பாரதீய ஜனதா கட்சிக்கு, பொதுமக்கள் வாக்களிக்க வேண்டாம்.
பாரதீய ஜனதாவினர் மீண்டும் உங்கள் வீட்டு வாசலுக்கு வருவார்கள். மோடியின் பெயரை சொன்னால் அவர்களை செருப்பால் அடிங்கள். அவர்கள் பயனற்றவர்கள். தொழிலாளர்களின் பிரச்சினைகளை கூட புரிந்து கொள்ள மாட்டார்கள்” என்று பிரமோத் முத்தாலிக் கொந்தளிப்புடன் கூறி உள்ளார்.