செய்திகள்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக முறையே இருக்காது: திருமாவளவன் எச்சரிக்கை

Makkal Kural Official

சென்னை, ஏப். 12–

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

“அம்பேத்கர் இயற்றித் தந்த அரசமைப்புச் சட்டத்தை ஒழிப்பதையே மோடி அரசு தனது இலக்காக வைத்துள்ளது. இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றான ‘மதச்சார்பற்ற நாடு’ என்பதை மாற்றி இந்தியாவை ‘மதம் சார்ந்த நாடு’ என அறிவிப்பதற்கும், மீண்டும் மனு நூலின் அடிப்படையில் வருண வேற்றுமையை சட்டபூர்வமாக ஆக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது. இதனை வெளிப்படையாகவே பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் இந்தத் தேர்தல் பரப்புரையில் பல இடங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வயது வந்தோருக்கு வாக்குரிமையை வழங்கி உள்ளது. ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் சமத்துவத்தை அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்தி உள்ளது. அதனை அழித்தொழித்து மீண்டும் மனுநூலில் அடிப்படையில் நாட்டை ஆள்வதற்கும், இந்திய சமூகத்தைப் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கொண்ட சமூகமாக சட்டரீதியாக மாற்றி அமைப்பதற்கும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் முற்படுகின்றன.

அதற்காகவே இந்தத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். அவர்களது நோக்கம் நிறைவேறிவிட்டால், அதாவது மீண்டும் பாஜக பாசிசக் கும்பல் ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது. இந்தியாவை சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதே அவர்களின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தின் அடிப்படையாகும். எனவே, அவர்களது சதித்திட்டத்தை முறியடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பாதுகாப்பதும் நமது முதன்மையான கடமைகளாகும். புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் இந்தக் கடமைகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம்.

இந்தத் தேர்தல், நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல; இந்திய நாட்டையும் அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல். சங்–பரிவார் கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டுவோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *