டெல்லி, மே 26–
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாஜகவினர் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதை தொடர்ந்து, பிரதமர் மோடி பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாஜகவினர் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய நிலையில், பொதுவெளியில் கவனமாக பேச வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அநாகரீகமாக பேசக்கூடாது
இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி, இருநாட்டு ராணுவமும் மோதலில் ஈடுபட்டது.கடந்த மே 7,8 மற்றும் 9 ஆம் தேதி நடைபெற்ற இந்த மோதலையடுத்து, இருநாடுகளும் சமரசமானது. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாஜக அரசியல் தலைவர்கள் கூறியது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், 20 மாநிலத்தின் முதலமைச்சர்கள், 18 துணை முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் பொதுவெளியில் அநாகரீகமாக பேசக்கூடாது என்றும், தேவையற்ற கருத்துகள் கூறுவதை தவிர்த்து பொறுப்புடன் கவனமாக பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.