ஏடிஆர் ஆய்வறிக்கையில் தகவல்
டெல்லி, செப். 5–
பாஜகவின் சொத்து மதிப்பு ஓராண்டில் 21.17 சதவீதம் அதிகரித்து ரூ.6,046.81 கோடியாக உயர்ந்துள்ளது என்று ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கத்தின் (ஏடிஆர்) ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் 8 தேசிய கட்சிகளின் சொத்துப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், பாஜக தேசிய கட்சிகளில் மிக அதிக சொத்து மற்றும் கையிருப்பு நிதியை கொண்ட கட்சியாக வளர்ந்துள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ.4,990 கோடியிலிருந்து 2021-22-ஆம் ஆண்டில் ரூ.6,046.81 கோடியாக அதிகரித்துள்ளது. இது 21.17 சதவீத உயாவாகும்.
காங்கிரசுக்கு அதிக கடன்
காங்கிரஸ் சொத்து மதிப்பு 2020-21-இல் ரூ.691.11 கோடியாக இருந்தது, 16.58 சதவீதம் உயர்ந்து 2021-22-இல் ரூ.805.68 கோடியாக அதிகரித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.732.79 கோடியிலிருந்து, 2021-22-ஆம் ஆண்டில் 690.71 கோடியாக குறைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு அதிக கடன்கள் இருப்பது ஏடிஆர் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்த கட்சிக்கு 2020-21-ஆம் ஆண்டில் ரூ.71.58 கோடி கடன் இருந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.16.109 கோடி கடன் இருந்ததாக அறிவித்துள்ளது.
சொத்து மதிப்பைப் போலவே, மொத்த மூலதனம் மற்றும் கையிருப்பு நிதி அளவிலும் பாஜக முதலிடம் வகிக்கிறது. இக் கட்சி ரூ. 6,041.64 கோடி மூலதனம் மற்றும் கையிருப்பு நிதியை தன்வசம் வைத்துள்ளது. கடன் விவரங்கள் தொடர்பாக இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் நிறுவன வழிகாட்டுதலை தேசிய கட்சிகள் முறையாக பின்பற்றவில்லை என்றும் ஏடிஆர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.