செய்திகள்

பாஜக எம்பி கங்கனாவுக்கு பளார் விட்ட பெண் போலீஸ் பெங்களுருக்கு மாற்றம்?

Makkal Kural Official

மும்பை, ஜூலை 4–

நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தை, சண்டீகர் விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் தற்போது பெங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இன்னும் சஸ்பெண்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி சண்டீகர் விமான நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன்னை கன்னத்தில் பளார் என்று அறைந்ததாக புகார் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த அந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கங்கனா அளித்த புகாரின் அடிப்படையில் கவுரிடம் விசாரணை நடந்தது.

நடிகையை அறைந்தது ஏன்?

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தரக்குறைவாக பேசியிருந்ததால் குல்விந்தர் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. மேலும் விவசாயிகளின் போராட்டத்தில் குல்விந்தரின் தாயும் கலந்து கொண்டிருந்ததும், கங்கனாவின் விமர்சனத்தால் குல்விந்தர் நேரடியாக பாதிக்கப்பட்டதாலும் கங்கனாவை அவர் தாக்கியது தெரியவந்தது.

குல்விந்தர் கவுரின் செயலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. மொஹாலியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவராஜ் சிங், அந்த பெண் காவலருக்கு ரூ. 1 லட்சம் பரிசு அறிவித்திருந்தார். அது போல் பிரபல பாடகர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலருக்கு வேலை வாங்கிக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இது தவிர விவசாயச் சங்கங்களும் பெண் காவலர் விவகாரத்தில் விசாரணை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தின. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது சண்டீகர் விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், குல்விந்தர் இன்னும் சஸ்பெண்ட்டில் இருப்பதாகவும் அவர் மீது துறைரீதியான விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *