செய்திகள்

பாஜக ஆதரவு வாபஸ்– நிதிஷ்குமார்

Makkal Kural Official

பாட்னா, ஜன. 23–

மணிப்பூரில் ஆளும் பாஜக தலைமையிலான அரசிற்கு அளித்து வந்த ஆதரவை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வாபஸ் பெற்றுள்ளது, தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பைரென் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களிலும் தனித்து போட்டியிட்ட பாஜக 32 இல் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்தது. இதையடுத்து தேசிய மக்கள் கட்சி 7, காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் 2, ஐக்கிய ஜனதா தளம் 6, நாகா மக்கள் முன்னணி 5 என வெற்றி பெற்றனர். இதில் பாஜகவிற்கு ஆதரவாக ஐக்கிய ஜனதா தளம் நின்றது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக அரசிற்கான ஆதரவை நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் திரும்ப பெற்று கொண்டது. இது தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய ஜனதா தளம் முடிவு

மணிப்பூர் மாநிலத்தை பொறுத்தவரை ஐக்கிய ஜனதா தளம் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆளும் பாஜக அரசிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஏனெனில் 32 இடங்கள் உடன் தனிப்பெரும் கட்சியாக போதிய பெரும்பான்மை உடன் இருக்கின்றனர். மணிப்பூரில் நிலவும் சிக்கல் என்பது குக்கு மற்றும் மெய்தி இனக் குழுக்கள் இடையிலான தொடர் மோதல். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி விட்டன. இதில் பலர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்த விவகாரத்தில் பாஜக அரசு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி நேரில் சென்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏன் ஆறுதல் கூறவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இந்த சூழலில் பாஜக அரசிற்கு அளித்து வந்த ஆதரவை கடந்த ஆண்டு நவம்பரில் தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றுக் கொண்டது. அப்போது அவர்கள் கூறிய காரணம் என்பது மாநிலத்தின் பதற்றமான சூழல். இதே காரணத்தை முன்வைத்து தான் தற்போது ஐக்கிய ஜனதா தளமும் பின் வாங்கியிருக்கிறதா? என்ற கேள்வியை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *