செய்திகள்

பாஜக ஆட்சியில் வேலையில்லை; சிறு குறு தொழில்கள் அழிந்துவிட்டது : செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 26–

10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலையில்லா சூழல் ஏற்பட்டுள்ளதுடன் சிறு குறு தொழில்கள் அழிந்துவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:–

ஒவ்வொரு கட்சியின் ஆட்சி முறைக்கு ஒரு மாடல் இருக்கிறது. அனைவருக்கும் அனைத்தும் என்பது திமுகவின் திராவிட மாடல். அதுபோல், பாரதீய ஜனதாவின் மாடல் என்பது, மாநில உரிமைகளை பறிப்பது, கட்சிகளை அழிப்பது, எதிர்க்கட்சிகள் மீது வழக்குப்போட்டு மிரட்டுவது, கட்சிக்குள் சேர்ந்தவுடன் வழக்குகளை திரும்பப்பெற்றுக்கொள்வது என்பதுதான் பாரதீய ஜனதா ஆட்சியின் மாடலாக இருக்கிறது.

இந்தியா கூட்டணி கட்சிகளிடம் வெறுப்பு அரசியல் என்பதே இல்லை. அன்பும், பிறரை அரவணைக்கும் போக்கும்தான் உள்ளது. இந்தியா முழுவதும் பாரதீய ஜனதாவுக்கு எதிரான அமைதிப் புரட்சி நடந்து வருகிறது. தேர்தல் முடிந்ததும் தெரியவரும். தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது மக்களுக்கு கொடுக்கும் ஆட்சி என்று பொருள். பாஜகவினர் மோடி ஆட்சி அமைப்போம் என்று கூறுவது மக்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும் ஆட்சி என்பதே நிலைமையாக உள்ளது.

அனைவருக்கும் பிரதிநிதித்துவம்

இன்று மாலைக்குள் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவார். தமிழ்நாடு தேர்தல் பரப்புரைக்கு ராகுல் காந்தி விரைவில் வருவார். மக்களவை தேர்தலில் புதியவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் அனைத்து சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருவள்ளூர், திருநெல்வேலி, விளவங்கோடு என பல இடங்களில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான பாரதீய ஜனதாவின் 10 ஆண்டு கால ஆட்சியில், இந்தியாவில் இருந்த வேலைவாய்ப்பும் பறிபோய் உள்ளது. கருப்புப் பணத்தை ஒழிப்பேன், கள்ளப்பணத்தை தடுத்து தீவிரவாதத்தை அழிப்பேன், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவேன், சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று சொன்ன எதையுமே நிறைவேற்றாதவர் மோடி. மேலும் ஜிஎஸ்டி வரி சட்டம் மூலம் சிறு குறு தொழில்களை ஆழித்துவிட்டார். பண மதிப்பு நீக்கம் திட்டம் மூலம், இந்திய பொருளாதாரத்தையே சீரழித்ததுதான் நரேந்திர மோடியின் சாதனை.

ஆனால், தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி கட்சியான திமுக அறிவித்த 90 சதவீத வாக்குறுதிகளை, 2 1/2 ஆண்டுகளிலேயே நிறைவேற்றி உள்ளார்கள். ஆனால் உண்மையை எப்போதும் பேசாத கட்சி பாரதீய ஜனதா கட்சி. 2014 ஆம் ஆண்டு வரையில் காங்கிரஸ் கட்சி, இந்தியாவில் வாங்கி இருந்த கடனையும், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக வாங்கியுள்ள கடனையும் ஒப்பிட்டு பார்த்தாலே, ஆட்சியின் நிர்வாகம் தெரிந்துவிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *