தரவுகளுடன் ராஜஸ்தான் முதல்வர் குற்றச்சாட்டு
ஜெய்ப்பூர், ஆக. 2–
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் டுவிட்டர் பதிவில், பா.ஜ.க-வுக்கு கசப்பான உண்மையாக இருந்தாலும் தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகளின்படி…
1. பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகபட்சமாக பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசத்தில்தான் பதிவாகியிருக்கிறது.
2. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கடத்தல் ஆகியவற்றில் உத்தரப்பிரதேசம் முன்னணியில் இருக்கிறது.
3. சிறுவர், சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் போக்சோ வழக்குகளில், நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் மாநிலம், மத்தியப் பிரதேசம்தான். ராஜஸ்தான் 12-வது இடத்தில் இருக்கிறது.
ஒப்பிட்டு பாருங்கள்
4. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் 2019-ம் ஆண்டை ஒப்பிடும்போது, 2021-ல் ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருக்கின்றன. அதே நேரத்தில் பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசம், அரியானா, குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன.
5. பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களை உலகமே பார்த்திருக்கிறது.
6. ஜோத்பூரில் காதலன் கண்முன்னே காதலியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏ.பி.வி.பி தொண்டர்கள் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்.
7. ராஜஸ்தானில் எஃப்.ஐ.ஆர் கட்டாயப் பதிவு என்ற கொள்கை இருந்தபோதிலும், 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021-ல் சுமார் 5% குறைவான குற்றங்களே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
8. அஸ்ஸாம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடப்பதாகக் கூறப்படுகிறது. அதில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களே முதல் 5 இடத்தில் இருக்கின்றன.
ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால், இது தொடர்பாக முழு விசாரணை நடக்கிறது. ஆனால் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் தோல்விகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, பா.ஜ.க தலைவர்கள் ராஜஸ்தானுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என அசோக் கெலாட் குறிப்பிட்டிருக்கிறார்.